×
 

“பாஜகவிடம் மண்டியிடும் எடப்பாடி.. அதிமுக டெபாசிட் காலியாகும்!” - வெளுத்து வாங்கிய பெங்களூரு புகழேந்தி!

2026 தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்றும், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் விரைவில் தவெக-வில் இணையவுள்ளதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சேலம் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு புகழேந்தி, அதிமுக-வின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். "பணியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவனாம்" என்ற பாடலைப் பாடித் தனது பேச்சைத் தொடங்கிய அவர், "நேற்றைய தினம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது பேச்சுவார்த்தைக்காக அல்ல; அவர்கள் எடுத்த முடிவை எடப்பாடியிடம் தெரிவிக்கவே வந்தார்கள்" எனத் தெரிவித்தார்.

பாஜக தரப்பிலிருந்து 75 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் எனக் கறாராகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தற்போது அதிமுக வெற்றி பெற்றுள்ள பல தொகுதிகளும் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். "இந்த 75 சீட்டுகளைப் பாஜகவிற்குத் தாரை வார்த்துவிட்டு அவர்களுக்கு அடிமையாகவே எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். வெளியே கூட்டணி இல்லை என்று சொன்னாலும், அவர்கள் எப்போதும் பாஜக-வை விட்டு வெளியே வரமாட்டார்கள். அமித்ஷா சென்னை வரும்போது எடப்பாடி பழனிசாமி இந்தப் பட்டியலில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிடுவார். இந்தத் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்; ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது" என ஆவேசமாகப் பேசினார்.

பாமக குறித்துப் பேசிய அவர், "ஒருமுறை நான் பாமக-வை விமர்சித்ததற்காகவே எடப்பாடி என்னைக் கட்சியை விட்டு நீக்கினார். இன்று பாமக தொண்டர்கள் அப்பாவிற்கு (ராமதாஸ்) வாக்களிப்பதா அல்லது மகனுக்கு (அன்புமணி) வாக்களிப்பதா என்ற குழப்பத்தில் உள்ளனர். பலர் யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்" என்றார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் பெரியார் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். "அதிமுக-வின் மூத்த நிர்வாகிகள் பலரும் விரைவில் தவெக-வில் இணைய உள்ளனர். அடுத்த 15 நாட்களில் லட்சக்கணக்கான இளைஞர்களைத் திரட்டிப் பிரமாதமான ஒரு முடிவை நாங்கள் அறிவிப்போம்; எடப்பாடி என்கிற சர்வாதிகாரியை ஒழிக்காமல் விடமாட்டேன்" எனப் புகழேந்தி சபதம் ஏற்றார்.

இதையும் படிங்க: அன்புமணியால் ராமதாஸ் வேதனை! அதிமுக - பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை - ஜி.கே.மணி


 

இதையும் படிங்க: அதிமுக-பாஜக வெற்றிக்கு உழைப்போம்; "தவெக கட்சியே கிடையாது!" – விஜய்யை வெளுத்து வாங்கிய சரத்குமார்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share