×
 

"ரத்தமும் சதையுமாய் வளர்த்த கட்சிக்கு துரோகமா?" அன்புமணிக்கு எதிராக கொதித்தெழுந்த ஜி.கே.மணி!

தன்னை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்த அன்புமணி ராமதாஸ் தரப்பிற்கு எதிராக அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி யாருக்குச் சொந்தம் என்ற சட்டப் போராட்டம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ் மீது முன்வைத்துள்ள நேரடித் தாக்குதல்கள் தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

“சொந்தத் தந்தையையே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லும் ஒரு மகன், எப்படித் தொண்டர்களைக் காப்பார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அன்புமணியின் துரோகங்கள் இனி பாமக-வில் எடுபடாது என்றும், கட்சி இன்றும் என்றும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் இரும்புக்கரங்களில்தான் இருக்கும் என்றும் அதிரடியாக 
பேசியுள்ளார்.

சேலத்தில் இன்று நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். “பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சிறைக்குச் சென்றும், இன்னுயிரைத் தியாகம் செய்தும் உருவாக்கிய இந்த 50 ஆண்டுகால பேரியக்கத்தை, அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை மீறி அன்புமணி கைப்பற்ற நினைப்பது பகற்கனவு” என அவர் எச்சரித்தார்.

இதையும் படிங்க: "பாமக யாருக்கு சொந்தம்?" சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு தொடக்கம்! 'ஐயா தான் ஆணிவேர்' முழக்கத்தால் அதிரும் அரங்கம்!

தொடர்ந்து பேசிய அவர், “பெற்று வளர்த்த தந்தையால்தான் அன்புமணி மத்திய அமைச்சர் பதவியை அனுபவித்தார். ஆனால் இன்று அந்தத் தந்தையை ‘தலையணை வைத்துத் கொல்லுங்கள், கழுத்தில் காலை வைத்து அமுக்கிக் கொல்லுங்கள்’ என்று கூறும் அளவிற்கு அன்புமணி சென்றுவிட்டாரா?” என உணர்ச்சிவசப்பட்டுக் கேள்வி எழுப்பினார். “அன்புமணியின் துரோகம் இப்போது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. தனது தந்தை மனநலம் பாதிக்கப்பட்டுப் பிள்ளை போல் ஆகிவிட்டார் என்று கூறும் அன்புமணி, ஒரு மகனாக அவரைப் பாதுகாக்காமல் அவருக்கு எதிராகத் துரோகம் செய்வது முறையா?” என அவர் காட்டம் தெரிவித்தார்.

அன்புமணியின் அரசியல் ஆட்டம் இனி பாமக-வில் எடுபடாது என்று குறிப்பிட்ட ஜி.கே.மணி, அவர் வேறு வேலையைப் பார்க்க வேண்டியது தான் என எள்ளி நகையாடினார். “பாட்டாளி மக்கள் கட்சி இப்போதும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் தலைமையில்தான் பீடு நடை போடுகிறது. தொண்டர்கள் அனைவரும் வீண் வதந்திகளை நம்பாமல், 2026 தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்தார். தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான இந்தப் போர், தமிழக அரசியலில் பாமக-வின் எதிர்காலம் குறித்த விவாதங்களைப் பெரும் பரபரப்பாக்கியுள்ளது.


 

இதையும் படிங்க: “அன்புமணிக்கு அதிகாரம் இல்லை; அவரை நீக்கியதே டாக்டர் ஐயா தான்!” - சேலத்தில் ஜி.கே.மணி அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share