“அன்புமணிக்கு அதிகாரம் இல்லை; அவரை நீக்கியதே டாக்டர் ஐயா தான்!” - சேலத்தில் ஜி.கே.மணி அதிரடி!
அன்புமணியைக் கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கியதால் அவருக்கு யாரையும் நீக்க அதிகாரமில்லை என ஜி.கே.மணி தெரிவித்தது பாமகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் மிக முக்கியமான பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை சேலத்தில் நடைபெற உள்ளது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்க உள்ள இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்து வரும் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "டாக்டர் ராமதாஸ் அவர்களின் ரத்தமும் வியர்வையும் சிந்தி வளர்க்கப்பட்ட இந்த இயக்கம், யாராலும் அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அன்புமணியின் செயல்பாடுகளாலும், அவரைச் சுற்றி இருப்பவர்களாலும் கட்சி வலுவிழந்து வருகிறது. இதனால் டாக்டர் ஐயா அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து கட்சியின் அதிகாரம் குறித்துப் பேசிய ஜி.கே.மணி, "டாக்டர் அன்புமணியைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே டாக்டர் ராமதாஸ் அவர்கள் ஏற்கனவே நீக்கிவிட்டார். நிலைமை இப்படி இருக்க, தற்போது அன்புமணி சில நிர்வாகிகளை நீக்குவதாக அறிவிப்பது சட்டப்படி செல்லாது. அதற்கான ஒரு துளி அதிகாரம் கூட அவருக்குக் கிடையாது" என அதிரடியாகக் குறிப்பிட்டார். நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவில் கட்சியின் எதிர்காலம் மற்றும் கூட்டணி குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்துக் கேட்டபோது, "பாமக யாருடன் கூட்டணி அமைக்கிறதோ, அந்த அணிதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது வரலாறு. எனவே, பாமக எப்போதும் வெற்றி கூட்டணியைத் தான் தேர்ந்தெடுக்கும். இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தைகள் துவங்கவில்லை, காலம் வரும்போது அது குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும்" என்றார். இந்தப் பேட்டியின் போது சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். நாளை டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் பொதுக்குழுவில் இந்த உட்கட்சி விவகாரங்கள் எத்தகைய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: "திமுக-வுக்கு எதிரான அலை.. சுனாமியா மாறும்!" - நெல்லையில் அன்புமணி எச்சரிக்கை!
இதையும் படிங்க: ராமதாஸ் தலைமையில் சேலம் பொதுக்குழு உறுதி! - அன்புமணி தரப்புக்கு ஜி.கே.மணி பதிலடி!