கிராவல் மண் குவாரி ஒப்பந்ததாரர் மாற்றம்! அமைச்சர் தலையீடு காரணமா? தேர்தல் நேர பரபரப்பு!
தமிழகத்தில் கிராவல் மண் எடுக்கும் குவாரிகளை, ஒட்டு மொத்தமாக கையாளும் ஒப்பந்ததாரர், திடீரென மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கிராவல் மண் குவாரிகளை ஒட்டுமொத்தமாக கையாளும் ஒப்பந்ததாரர் திடீரென மாற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்று மணலுக்கு அடுத்தபடியாக கட்டுமானத் துறையில் அதிகம் பயன்படும் கிராவல் மண் எடுப்பதற்கு ஏரி, குளம், வாய்க்கால் பகுதிகளில் மாவட்ட கலெக்டர்கள் அனுமதி வழங்குகின்றனர். ஆன்லைன் முறை அறிமுகமானாலும், நடைமுறையில் ஒரு சில ஒப்பந்ததாரர்கள் மூலமாகவே அனைத்து பணிகளும் நடப்பது வழக்கம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 2-3 இடங்களில் கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டாலும், வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும் ஒட்டுமொத்த கட்டுப்பாடு ஒரே நபரிடம் இருந்து வந்தது. புதுக்கோட்டையை சேர்ந்த ராஜப்பா என்பவர் இதுவரை இந்த பொறுப்பை வகித்து வந்தார். அவர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்க்கு நெருக்கமானவர் என்பதால், அவரை மாற்ற முடியாத நிலை நீண்ட காலமாக இருந்தது.
இந்நிலையில், அமைச்சரின் ஒப்புதலுடன் ராஜப்பா மாற்றப்பட்டு, அதே புதுக்கோட்டையை சேர்ந்த கோபு என்பவரிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த மாற்றம் நடந்துள்ளது அதிகாரிகள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: ரிலீஃபான அமைச்சர்கள் குடும்பம்..!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!! என்ன விஷயம் தெரியுமா..??
தமிழக மணல், எம்-சாண்ட் லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த நல சம்மேளன தலைவர் ஆர்.பன்னீர் செல்வம் கூறுகையில், "சட்ட விதிகளுக்கு உட்பட்டு கிராவல் மண் குவாரிகளை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஒரே ஒப்பந்ததாரர் மூலம் ஒட்டுமொத்தமாக கையாள்வது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது. போலி ரசீது, போலி பர்மிட் புழக்கம் அதிகரிக்கிறது. கிராவல் மண் கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகள், மண் எங்கிருந்து, யார் பெயரில் கொண்டு வரப்பட்டது என விசாரிப்பதில்லை. இதனால் கடத்தல், அரசுக்கு வருவாய் இழப்பு தொடர்கிறது. அரசு நினைத்தால் மட்டுமே இதை தடுக்க முடியும்" என்றார்.
இந்த மாற்றம் கிராவல் மண் சந்தையில் புதிய சமநிலையை ஏற்படுத்துமா அல்லது முறைகேடுகள் தொடருமா என்பது கட்டுமானத் துறை மற்றும் போக்குவரத்து தரப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் இத்தகைய மாற்றங்கள் அரசியல் காரணங்களால் நடக்கிறதா என்பது விவாதமாக உள்ளது.
இதையும் படிங்க: உதயநிதி ப்ரண்டுனா இப்பிடியா? துரைமுருகன் நாற்காலியில் மகேஷ்! திமுக-வில் மூத்த அமைச்சர்கள் அதிர்ச்சி!