×
 

தேமுதிகவுக்கு தூது விட்ட பழனிசாமி!! உதயகுமாரை ஒருமணி நேரம் காத்திருக்க வைத்த பிரேமலதா!

மதுரையில் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவை, ஒரு மணி நேரம் காத்திருந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் சந்தித்து பேசினார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி பெருவெற்றி பெற்றதும், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதற்காக மற்ற கட்சிகளை இணைக்கும் முயற்சியில் அ.தி.மு.க. தீவிரமாக இறங்கியுள்ளது. 

அதன் ஒரு பகுதியாக, நேற்று மதுரையில் தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் நேரில் சந்தித்துப் பேசினார்.

நேற்று மதுரை அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தே.மு.தி.க.வின் ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்தும் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த உதயகுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து, கூட்டம் முடிந்ததும் பிரேமலதாவை தனியாகச் சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் இருவருக்கும் இடையே உரையாடல் நடைபெற்றதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: திணறும் BLO-க்கள்... லட்சக்கணக்கானோர் வாக்குரிமை பறிபோகும்... என்.ஆர் இளங்கோ எச்சரிக்கை..!

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், “பிரேமலதா அம்மாவின் தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கவே வந்தேன். கூட்டணி விவகாரத்தில் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார்” என்று கூறினார். 

ஆனால் அ.தி.மு.க. வட்டாரத்தில், “பீகார் வெற்றிக்குப் பின் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்காக தே.மு.தி.க., த.மா.கா., போன்ற கட்சிகளை இணைக்கும் முயற்சி தொடங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாகவே உதயகுமார் - பிரேமலதா சந்திப்பு நடந்துள்ளது” என்று தெரிவித்தனர்.

அதேநாளில் சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனும் சந்தித்துப் பேசியிருந்தார். பீகார் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிக வலுவானது என்றும், தமிழகத்திலும் அதே வெற்றியை நோக்கி செல்கிறோம் என்றும் வாசன் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2024 லோக்சபா தேர்தலின்போது தே.மு.தி.க. அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருந்தது. ஆனால் தேர்தலுக்குப் பின் இரு கட்சிகளுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. தற்போது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி மீண்டும் தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்ப்பதற்கான முன்னோட்டப் பேச்சுவார்த்தையாகவே இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க. தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், அ.தி.மு.க. முகாமில் “பீகார் வெற்றிக்குப் பின் எங்கள் கூட்டணி மிக வலுவாக உள்ளது. விரைவில் பல கட்சிகள் எங்களோடு இணையும்” என்ற நம்பிக்கை வலுவாக உள்ளது என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மரணத்திற்கு அஞ்சாதீர்கள்! தற்கொலை தாக்குதல் தியாகச்செயல்!! டெல்லி கார்வெடிப்பு உமர் பேசிய வைரல் வீடியோ

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share