பீகார் 'வாக்கு திருட்டு' விவகாரம்.. நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்கள் வெளியீடு..!
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் 2025 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தீவிர வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி முடிந்த நிலையில், கடந்த 1-ந்தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு, 65.2 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது. இறப்பு, நிரந்தர இடம்பெயர்வு, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு, மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாதது ஆகியவை நீக்கத்திற்கு காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில், 22 லட்சம் பேர் இறந்தவர்கள், 35 லட்சம் பேர் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், 7 லட்சம் பேர் இரட்டை பதிவு செய்தவர்கள், மற்றும் 1.2 லட்சம் பேர் ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள், குறிப்பாக இந்தியா கூட்டணி, இதை "வாக்குரிமை திருட்டு" என விமர்சித்து, தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளன. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி அன்று நீதிமன்றம், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை ஆகஸ்ட் 19-க்குள் வெளியிடவும், மாவட்ட வாரியாக காரணங்களை ஆகஸ்ட் 22-க்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: வாக்கு திருட்டுக்கு முற்றுப்புள்ளி!! ராகுல்காந்தி ஆவேசம்! பீகாரில் துவங்கியது வாக்குரிமை பேரணி!!
இந்த விவகாரம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினாலும், மத்திய அரசு மறுத்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டித்துள்ளார். மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இதேபோன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தேர்தல் நியாயத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்டதாகவும், சட்டப்படி தனிப்பட்ட பட்டியல் வெளியிட வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் ஆணையம் தெரிவித்தது. இருப்பினும், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வாக்காளர் விவரங்கள் வெளியிடப்பட்டு, முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலையீடு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை மேலும் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான இந்த விவகாரம், பீகாரில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: SIR நடவடிக்கைக்கு எதிராக பீகாரில் 16 நாட்கள் யாத்திரை.. நாளை தொடங்குகிறார் ராகுல் காந்தி..!