"சிக்குனா அவ்ளோ தான்"..! பைக் ரேஸ், விபத்துகளை தடுக்க 13 தனிப்படைகள்... தீவிர கண்காணிப்பு..!!
பைக் ரேஸ், விபத்துகளை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சென்னையில் சமீப காலமாக அதிகரித்து வரும் சட்டவிரோத பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான சாகசங்களால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதையும், விபத்துகள் பெருகுவதையும் கருத்தில் கொண்டு சென்னை மாநகர காவல்துறை தீவிர நடவடிக்கைகளுக்குத் தயாராகியுள்ளது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நள்ளிரவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவங்களும், அதையொட்டி ஏற்பட்ட விபத்துகளும் காவல்துறையை இந்த முடிவுக்குத் தள்ளியுள்ளன.
இந்தப் பின்னணியில் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்படி பைக் ரேஸில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் நோக்கில் சிறப்புத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.உதவி ஆய்வாளர் தலைமையில் நான்கு பேர் கொண்ட பதிமூன்று தனிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு உதவி ஆய்வாளரும் மூன்று காவலர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தத் தனிப்படைகள் தினமும் இரவு பத்து மணி முதல் மறுநாள் அதிகாலை இரண்டு மணி வரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரதான சாலைகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளும். பைக் ரேஸ் மற்றும் வீலிங் போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் இளைஞர்களைக் கண்டுபிடிப்பதும், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதும் இவர்களின் முக்கியப் பணியாகும்.
இதையும் படிங்க: Instagram-ல் தொடங்கிய பழக்கம்!! காதல் என கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை! 4 பேர் கைது! பகீர் சம்பவம்!
சென்னையில் இரவு நேரங்களில் குறிப்பாக வார இறுதி நாட்களில் முக்கிய சாலைகளில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி சாகசங்கள் நிகழ்த்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற செயல்களால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகளும் உயிரிழப்புகளும் நிகழும் அபாயம் உள்ளது. சமீபத்திய சம்பவங்களில் பலர் கைது செய்யப்பட்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளன. இருப்பினும் முழுமையாக இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த இன்னும் கடுமையான கண்காணிப்பு தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தே இந்தத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: காவல்துறையில் காலி பணியிடங்கள்... ஏன் தாமதம்.? தேர்வெழுதி காத்திருக்கும் அவலம்.. வேல்முருகன் காட்டம்..!