காவல்துறையில் காலி பணியிடங்கள்... ஏன் தாமதம்.? தேர்வெழுதி காத்திருக்கும் அவலம்.. வேல்முருகன் காட்டம்..!
காவல்துறையில் காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் தேர்வு எழுதியவர்கள் காத்திருக்கும் நிலை எதற்காக என்று வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், காவல்துறையில் சுமார் 15,000 பணியிடங்கள் காலியாக இருந்தும் ஆட்சேர்ப்பு தாமதப்படுவதைக் கடுமையாகச் சாடியுள்ளார். தமிழ்நாட்டில் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அரணாகத் திகழ வேண்டிய காவல்துறையில் அனுமதிக்கப்பட்ட 1,34,667 பணியிடங்களில் வெறும் 1,18,851 பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர் என்றும், இதனால் ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்கள் தேர்வுகளை முடித்தும் பணி நியமன ஆணைக்காக வீடுகளில் காத்திருக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
காவல்துறைக்கு ஆட்கள் தேவை, தகுதியான இளைஞர்களும் தயார் நிலையில் உள்ளனர், பணியிடங்களும் காலியாகக் கிடக்கின்றன. இத்தகைய சூழலிலும் நியமனங்களை மேற்கொள்ளாமல் அரசு தயங்குவது ஏன் என்று வேல்முருகன் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட 3,644 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன. ஆனால் உயரம் அளவீடு தொடர்பான வழக்குகள் மற்றும் தமிழ்வழிக் கல்வி இடஒதுக்கீடு வழக்குகளைக் காரணம் காட்டி, உதவி ஆய்வாளர் உள்ளிட்ட அடுத்தகட்ட பணி நியமனங்கள் காலவரையின்றி முடங்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்ற வழக்குகளைத் திறம்படக் கையாண்டு விரைந்து தீர்வு காண்பது அரசின் கடமை என்றும், வழக்குகள் முடியும்வரை தேர்வர்களின் வயது நின்றுவிடப் போவதில்லை, குடும்பச் சூழலும் வறுமையும் காத்திருக்கப் போவதில்லை என்றும் வேல்முருகன் வலியுறுத்தினார். காவல்துறையில் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதால், பணியில் உள்ள காவலர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும் கூடுதல் பணிச்சுமைக்கும் ஆளாகின்றனர். ரோந்து, பாதுகாப்பு, குற்றப்புலனாய்வு, நீதிமன்றப் பணிகள் என ஒரு காவலரே இரண்டு பேரின் பணிகளைச் சுமக்க வேண்டிய அவலநிலை நீடிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.ஓய்வுபெறும் காவலர்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே திட்டமிட்டு, காலியிடங்கள் உருவாவதற்கு முன்பே ஆட்சேர்ப்புப் பணிகளைத் தொடங்குவதுதான் தொலைநோக்குள்ள நிர்வாகத்திற்கு அழகு என்று அவர் கூறினார். தற்போதைய ஆட்சி நிர்வாகத்தின் அணுகுமுறை திட்டமிடல் தோல்வியையே காட்டுகிறது என்று வேல்முருகன் விமர்சித்தார்.
இதையும் படிங்க: சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!
காவல்துறைப் பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் இழுத்தடிப்பதற்குப் பொறுப்பு யார், தேர்ச்சி பெற்ற இளைஞர்களின் பணி நியமனத்தை முடக்கியுள்ள சட்டச் சிக்கல்களுக்கு அரசு கண்ட தீர்வு என்ன, ஓய்வுபெறும் எண்ணிக்கையைக் கணக்கில்கொண்டு உடனுக்குடன் ஆட்சேர்ப்பு நடத்தத் தொடர் திட்டம் இல்லையா, காவலர்களின் பணிச்சுமையைக் குறைத்து குற்றத்தடுப்புப் பிரிவை வலுப்படுத்த உடனடி நடவடிக்கை என்ன என்று தொடர்ச்சியான கேள்விகளை அவர் எழுப்பினார்.சாக்குப் போக்குகளைக் கைவிட்டு, சட்டச் சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு கண்டு, தகுதிபெற்ற இளைஞர்களுக்குத் தாமதமின்றிப் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தினார். இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவதும், காவலர்களைப் பணிச்சுமையில் வாடவிடுவதும் மக்கள் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தும் என்று அவர் எச்சரித்தார். எனவே தமிழ்நாடு அரசு வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வழிவகை செய்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!