50 லட்சம் பேருக்கு மட்டன், சிக்கன் பிரியாணி!! ஆர்டர் கொடுத்துவிட்டு எலெக்ஷனுக்கு தயாராகும் கட்சிகள்!
அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பங்கேற்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு, பெரும்பாலும் பிரியாணி வழங்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நாளுக்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சிகள் ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் தங்கள் முகவர்கள் மற்றும் தொண்டர்களுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி வருகின்றன. அதில் முக்கியமாக, உணவு ஏற்பாடுகள் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அசைவ உணவுகளில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது பிரியாணி (Biryani) என்பதால், தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு பிரியாணி வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் அதே போன்று, பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள சமையல் கலைஞர்களிடம் பெரிய அளவில் ‘ஆர்டர்’ வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை மறுநாள் நடைபெறவுள்ள வாக்குப்பதிவின் போது, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தேர்தல் அதிகாரிகள், கட்சி முகவர்கள் மற்றும் வெளியில் பணிபுரியும் தொண்டர்கள் என குறைந்தது 100 பேர் வரை இருப்பர். இவர்கள் அதிகாலை முதல் இரவு வரை அங்கு இருப்பதால், காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவு வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: சந்திரபாபு நாயுடு!! ரேகா குப்தா வருகை! தமிழகத்தை முற்றுகையிட்ட தேஜ கூட்டணி முதல்வர்கள்!!
மாநிலம் முழுவதும் 75,064 ஓட்டுச்சாவடிகள் உள்ள நிலையில், குறைந்தது 50 லட்சம் பேருக்கு அன்றைய தினம் உணவு வழங்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பெரிய கட்சிகள் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 போன்ற உணவுகளுக்கு அதிக அளவில் ஆர்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மற்ற கட்சிகள் பெரும்பாலும் சிக்கன் பிரியாணியை தேர்வு செய்துள்ளன.
இதுகுறித்து சமையல் கலைஞர்கள் கூறியதாவது: “மட்டன், சிக்கன் பிரியாணி ஹோட்டல்களில் ஆர்டர் கொடுத்தால், செலவு பன்மடங்கு அதிகரிக்கும். அளவும் குறைவாக இருக்கும். எனவே, தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்களில் பெரும்பாலானோர், ஓட்டுப்பதிவின் போது தாராளமாக வழங்க மட்டன் பிரியாணி, சிக்கன் 65, 'ஆர்டர்' தந்துள்ளனர். மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள், சிக்கன் பிரியாணி ஆர்டர் தந்துள்ளனர். ஒரு கிலோ மட்டன் பிரியாணிக்கு, 2,000 - 2,500 ரூபாய்; கிலோ சிக்கன் பிரியாணிக்கு, 1,500 - 1,800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு கிலோ பிரியாணியை, தனித்தனியே பார்சலில் வழங்குவதால், 10 பேர் சாப்பிடலாம். அதனுடன், தயிர் பச்சடி, கத்திரிக்காய் வழங்கப்படும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த தகவல்கள் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் எவ்வளவு விரிவாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றன.
இதையும் படிங்க: நானும் திராவிடன்தான்!! அத மறந்துராதீங்க!! சென்னையில் சந்திரபாபு நாயுடு தீவிர பிரசாரம்!