“திருப்பி அடிக்க எனக்கும் தெரியும் திருமா... இந்த மிரட்டுற வேலை எல்லாம் வேணாம்” - நேரடி சவால் விட்ட அண்ணாமலை...!
திருமாவளவன் இதனை எல்லாம் விட்டுவிட்டு, நாகரிகமான அரசியலுக்கு வர வேண்டும்.
கடந்த 7ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனின் கார் மீது ராஜீவ் காந்தி என்ற வழக்கறிஞர் உடைய இருசக்கர வாகனம் மோதியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த விசிக தொண்டர்கள் அந்த வழக்கறிஞரை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், திருமாவளவன் தனது தொண்டர்களை அடக்கி வைக்க வேண்டும் என்றும், கார் மீது லேசாக உரசியதற்கு வழக்கறிஞர் என்றும் பாராமல் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றும் எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
குறிப்பாக திருமாவளவன் தனது தொண்டர்களின் செயல்களை காருக்குள் இருந்து பார்த்தும், வெளியே வந்து ஏன் தடுக்கவில்லை? என்ற விமர்சனம் எழுந்தது. அதற்கு விசிக கூட்டம் ஒன்றில் பதிலளித்த திருமா, முறைத்து பார்த்ததால் தான் அடி வாங்கினான். “அவ்வளவு திமிராடா உனக்கு; ஆணவமாடா உனக்கு” என்றுதான் அடித்தனர். வெறும் நான்கு அடிதான்; ஒழுங்காகக் கூட அடிக்கவில்லை என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை கடுமையாக விமர்சித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழ் நாட்டில் திருமாவளவனுக்கு இடமில்லை. பாகிஸ்தான் பார்டருக்கு சென்று வீரத்தை காட்டட்டும். அதை விட்டுவிட்டு அப்பாவி மக்களை தட்டுவதை ஏற்க முடியாது. ஒரு தலைவன் என்றால் காரில் இருந்து இறங்கி என்ன நடக்கிறது என்று பார்த்திருக்க வேண்டும். அதை தடுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் எதற்கெடுத்தாலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்று கூறுவது முறை அல்ல” எனக்கூறியிருந்தார்.
இதையும் படிங்க: சாதியப் பெயர்கள் நீக்கம்... தமிழ்நாடு அரசு நடவடிக்கைக்கு திருமா உற்சாகம் வரவேற்பு...!
இதனால் கோபமடைந்த விசிக தொண்டர் ஒருவர் வெளியிட்ட வீடியோவில், திருமாவளவன் எங்களுக்காக வாழ்கிறார். அவருக்கு ஏதாவது ஒன்று என்றால், தமிழகமே இயங்காது. பாஜகவிற்காக ஓட்டு கேட்டு வரும் போது, ஊர் ஊருக்கு ஒருத்தராவது விசிக ஆதரவாளர் இருப்பார், அவர் அண்ணாமலையை அடிப்பார்” என கொந்தளித்திருந்தார்.
இதனிடையே கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விசிக தலைவர் திருமாவளவனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். “திருமாவளவன் இதனை எல்லாம் விட்டுவிட்டு, நாகரிகமான அரசியலுக்கு வர வேண்டும். இதுபோன்ற வெறுப்பு அரசியல், வன்முறை, மிரட்டுவது, ரோட்டில் செல்பவர்களை இடிப்பது, கேள்வி கேட்டால் அடிக்கப்போவது இது என்ன விதமான அரசியல்? இவர்கள் தமிழகத்தில் என்ன மாற்றத்தை கொடுக்கப் போகிறார்கள். இவர்களால் என்ன மாற்றம் நடக்கும்” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “வன்முறை அரசியலால் யாருக்கு என்ன லாபம். அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட போவது கிடையாது. உங்களுக்கு தெரியும் அண்ணாமலையை பொறுத்தவரைக்கும் அடித்தால் மற்றவர்களைப் போல் வாங்கிக்கொண்டு போகிற ஆள் கிடையாது. ஒரு அடி அடிச்சா இரண்டு அடி திருப்பிக்கொடுப்பேன். வர வேண்டும் என்றால் வாருங்கள் நான் தயார். இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க. இதையெல்லாம் பார்த்து, காவல்துறை அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறேன். பல ரவுடிகளை டீல் பண்ணியிருக்கிறேன். இந்த வேலை எல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள்” என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: இன்னும் CASE கூட போடல... திருமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம்...!