கூட்டணியில் இணையப் பல அமைப்புகள் ஆர்வம்... பேச்சுவார்த்தை நடத்த மாநிலக் குழு அமைப்பு!
பாஜக கூட்டணியில் இணையப் பல அமைப்புகள் ஆர்வம் காட்டுவதால், பேச்சுவார்த்தை நடத்த வி.பி. துரைசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு, தமிழகத்தில் ஒரு வலுவான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிய அமைப்புகள் மற்றும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பிரத்யேக மாநிலக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழலில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலானத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துப் பணியாற்றப் பல்வேறு சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த அமைப்புகளின் தலைவர்களுடன் முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களைக் கூட்டணியில் இணைப்பதற்கானப் பணிகளை ஒருங்கிணைக்க இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ள இந்தக் குழுவின் தலைவராக, அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல் தலைவரும், மாநிலத் துணைத் தலைவருமான திரு. வி.பி. துரைசாமி (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் துணையாக, முன்னாள் டி.ஜி.பி-யும் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான திரு. ஜி. பாலச்சந்திரன் துணைத் தலைவராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலின் கனவு உலகத்தில் இருக்கிறார்! கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி!
இந்தக் குழுவினர் உடனடியாகத் தங்களதுப் பணிகளைத் தொடங்கி, கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள அமைப்புகளின் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச உள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாற்றாக ஒரு மெகா கூட்டணியைக் கட்டமைப்பதில் இந்தக் குழு முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது. "என்றும் தேசப்பணியில்" என்ற முழக்கத்துடன், கட்சியின் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் இந்தக் குழுவின் செயல்பாடுகள் அமையப் போகிறது. ஏற்கனவே அதிமுக, பாமக, தமாகா உள்ளிட்டக் கட்சிகள் கூட்டணியில் இருக்கும் நிலையில், மேலும் பல அமைப்புகளின் சேர்க்கை தமிழக அரசியல் களத்தில் பாஜகவின் பலத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “விஜய் இன்னும் விசில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்!” மதுரையில் நயினார் நாகேந்திரன் விளாசல்!