×
 

மாம்பழம் சின்னம் வழக்கு!! ராமதாஸுக்கு தொடர் சறுக்கல்!! மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!

மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) தொடர்ந்து நீடித்து வரும் உட்கட்சி மோதலில் ராமதாஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே உட்கட்சி பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவை மார்ச் 26 அன்று உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ராமதாஸ் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். சுப்ரீம் கோர்ட், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடும்படி உத்தரவிட்டது.

இதையும் படிங்க: மாம்பழ சின்னம் வழக்கு! சென்னை ஐகோர்ட் மறுப்பு!! பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சறுக்கல்!!

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய கோரிக்கையை நீதிமன்றம் முதலில் ஏற்க மறுத்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதால் மனு செல்லாது” என வாதிட்டார்.

அன்புமணி தரப்பில், “ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டனர். தந்தைக்கு எதிராக செயல்படவில்லை” என விளக்கம் அளிக்கப்பட்டது. பாமகவின் வடிவேல் ராவணன் தரப்பில், “ராமதாஸ் பொதுக்குழு கூட்டாமல் தன்னை தானே தலைவராக அறிவித்துக்கொண்டார்” என தெரிவிக்கப்பட்டது.

ராமதாஸ் தரப்பில், “நிர்வாகக் குழு கூடி ராமதாஸை தலைவராக தேர்வு செய்தது. தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு பரிசீலிக்கப்படாததால் வழக்கு தொடரப்பட்டது” என வாதிடப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவு பாமகவில் அன்புமணி தரப்புக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

தேர்தல் நேரத்தில் பாமகவுக்குள் நீண்டகாலமாக நீடித்து வரும் உட்கட்சி மோதல் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராமதாஸ் தரப்பு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: மாம்பழ சின்னம் வழக்கு! சென்னை ஐகோர்ட் மறுப்பு!! பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சறுக்கல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share