பிரதமர் மோடியின் அறிவிப்பை நிராகரித்த CJP! ‘தர்மேந்திர பிரதான் ராஜினாமாதான் தீர்வு’! போராட்டம் தீவிரம்!
வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை Cockroach Janata Party (CJP) நிராகரித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தங்களது முக்கிய கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அதுவரை போராட்டம் தொடரும் என்றும் CJP தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் CJP இயக்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இந்த போராட்டம் 33-வது நாளை எட்டியது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் இந்த இயக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சுக்குப் பிறகும், ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், இந்த விவகாரம் தேசிய அரசியலிலும் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி பதற்றம் உச்சம்... NEET போராட்டம் எதிரொலி; 16 மெட்ரோ நிலையங்கள் 2-வது நாளாக மூடல்!
இந்த சூழலில் பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) சமூக வலைதள பதிவில், “இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். சம்பந்தப்பட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
ஆனால், இந்த அறிவிப்பை ஏற்க மறுத்துள்ள CJP, “விரைவு நீதிமன்றம் அமைப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், பொறுப்பேற்க வேண்டிய கல்வி அமைச்சர் பதவியில் தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். அதன் பிறகே அரசின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை ஏற்படும்” என்று பதிலளித்துள்ளது.
இதனால், மத்திய அரசின் புதிய அறிவிப்புக்குப் பிறகும் நீட் விவகாரம் தொடர்பான போராட்டம் தணியாத சூழல் உருவாகியுள்ளது. போராட்டக்காரர்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: 4-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்... NEET விவகாரத்தில் கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்; CJP போராட்டம் தீவிரம்!