எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.. முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!
எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) கொள்கைத் திருவிழாவாக அறியப்படும் முப்பெரும் விழா, இன்று கரூர் அருகேயுள்ள கோடங்கிபட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தந்தை பெரியார் (ஈ.வெ.ரா.) பிறந்தநாள் (செப். 17), பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப். 15) மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் (செப். 17) ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த விழா, இம்முறை கரூர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சுமார் 3 லட்சம் தொண்டர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கி, தொண்டர்களை ஊக்குவிக்கும் சிறப்புரையை நிகழ்த்தினார். கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். விழா மாலை 5 மணிக்கு தொடங்கி, சாரல் மழைக்கிடை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நுழைவு வாயில் கோட்டை வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் வாகன ரோடுஷோவுடன் மேடைக்கு வந்து, தொண்டர்களின் ஆரவார வரவேற்பை ஏற்றுக்கொண்டார். போலீஸ் பாதுகாப்பு பலமாக இருந்தது.
இதையும் படிங்க: “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்.. செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், "முப்பெரும் விழா என்பது நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் திருவிழா. கொள்கையில்லா கூட்டத்தைச் சேர்த்து கும்மாளம் போட்டு மக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக. நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது. உறுதிமிக்க எஃகு கோட்டை திமுக," என சூளுரைத்தார்.
திராவிட மாடல் ஆட்சியின் பெருமைகளை எடுத்துரைத்து, "உலகம் போற்றும் திராவிடத்தின் பெருமை தொடர்ந்திட, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நீடித்து நிலைத்திட, ஏழாவது முறையாகக் கழக ஆட்சி மலர்ந்திட இந்த விழா வெற்றிப்பாதையாக அமையட்டும்," எனவும் கூறினார். 2026 தேர்தலில் வெற்றி பெற 2026-ஐ முன்னிட்டு இது முன்னோட்ட அணிவகுப்பு எனவும் வலியுறுத்தினார்.
மேலும் பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் நின்று உண்மையாக உழைக்கிறோம். தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமையும். நாட்டிலேயே முதலில் ஆட்சியை பிடித்த மாநில கட்சி திமுக. மிரட்டலுக்கு பயப்படும் கட்சி திமுக அல்ல. ஈராயிரம் ஆண்டுகளாக காவி கூட்டத்துடம் போராடி வருகிறோம். திமுகவுக்கு மாற்று, மாற்றம் என்றவர்கள் எல்லாம் மறைந்து போனார்கள் என்று கூறினார்.
விழாவில் தந்தை பெரியார் விருது மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதிக்கும், முரசொலி அறக்கட்டளையின் ‘முரசொலி செல்வம்’ விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வனுக்கும் வழங்கப்பட்டது. மேலும், கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட 16 நிர்வாகிகளுக்கு நற்சான்று, பணமுடிப்பு வழங்கப்பட்டன.
கனிமொழி நன்றி உரையில் தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார். இந்த விழா, திமுகவின் சமூகநீதி, சமத்துவம் கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தியது. தொண்டர்கள் "ஸ்டாலின் நம்பிக்கை கவசம்" என முழக்கமிட்டனர். கரூர் மாநகரம் முழுவதும் பேனர்கள் மற்றும் விளம்பரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: எந்த கொம்பனாலும் திமுகவை தொட முடியாது... கெத்தா சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!