டெல்லிக்கு அடிபணியும் அதிமுக! கொத்தடிமை கூட்டத்தை மக்கள் வீழ்த்துவார்கள் என முதல்வர் ஸ்டாலின் சாடல்!
அதிமுக தன்னை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாகவும், டெல்லிக்கு அடிபணியும் இந்த 'கொத்தடிமை கூட்டத்தை' வரும் தேர்தலில் தமிழக மக்கள் வேரோடு வீழ்த்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக உரையாற்றினார். டபுள் இஞ்சின் என்று சொல்லி வட மாநில மக்களை ஏமாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிற உங்கள் டப்பா இஞ்சின் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஓடாது எனப் பிரதமரின் விமர்சனங்களுக்கு அவர் நேரடிப் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று பிரதமர் பேசியதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், கொள்கையால் இணைந்துள்ள பலமான திமுக கூட்டணியை, இந்த ‘FAILURE’ கும்பல் வீழ்த்தப் போகிறதாம். இதைப் பிரதமரால் எப்படிச் சிரிக்காமல் சொல்ல முடிகிறது?” எனத் தர்க்கரீதியாகக் கேள்வி எழுப்பினார். மேலும், 2021-ல் பெற்ற படுதோல்வியில் இருந்து எந்தப் பாடமும் கற்காமல், மறுபடியும் கொத்தடிமை கூட்டமான அதிமுகவின் தோளில் அமர்ந்து கொண்டு பாஜக உள்ளே வரத் துடிப்பதாக அவர் கடுமையாகச் சாடினார்.
போதைப்பொருள் விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்த பிரதமருக்குப் பதிலளித்த முதல்வர், “போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ள மராட்டியத்தில் பேச வேண்டியதைப் பிரதமர் மதுராந்தகத்தில் பேசுகிறார். உண்மையில் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில்தான் அதிக அளவிலான போதைப் பொருட்கள் பிடிபட்டன; அந்த மாநிலங்களில் நிலவும் அவலத்தைச் சரி செய்யாமல் தமிழகத்தைப் பற்றிப் பேசுவது வேடிக்கை” எனப் புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்தார்.
இதையும் படிங்க: அரசியலில் அடுத்தடுத்து ட்விஸ்ட்..!! அதிமுகவுக்கு தாவப்போகும் ராஜ்யசபா எம்.பி..?? ஓபிஎஸ் அணிக்கு பேரிடி..!!
திமுக கூட்டணி என்பது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, அது ஒரு கொள்கைக் கூட்டணி என்று குறிப்பிட்ட முதல்வர், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மீண்டும் ஒருமுறை பாஜக - அதிமுக கூட்டணியைத் தூக்கி எறிவார்கள் என உறுதிபடத் தெரிவித்தார். மதுராந்தகத்தில் பிரதமர் மோடியுடன் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஒரே மேடையில் பங்கேற்றது, அவர்களின் ‘கொத்தடிமை’ அரசியலை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டது என்றும் அவர் தனது உரையில் பதிவு செய்தார்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்சினை முடிவுக்கு வந்தது; இனி இருவரும் இணைந்தே பயணிப்போம்! டிடிவி தினகரன் நெகிழ்ச்சி!