லண்டன் ட்ரிப் சர்ச்சையே முடியல... மீண்டும் வெளிநாடு பறக்கும் சி.எம்.விஜய்... எந்த நாடு? எப்போது தெரியுமா?
முதலமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றிருந்த முதலமைச்சர் விஜய், தற்போது தனது பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இந்தப் பயணத்தின்போது ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. குறிப்பாக, பயணத்தின் நோக்கம், உடன் சென்றவர்கள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான சந்திப்புகள் குறித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பின. லண்டன் சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில் விஜய் நடிகர் அஜித்தை சந்தித்த புகைப்படங்கள் வெளியானதும் இந்த விவகாரம் அரசியல் ரீதியாக விவாதமானது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்ற பயணத்தில் கார் பந்தய நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்தன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் விஜய்யின் லண்டன் பயணத்தின் நோக்கம் மற்றும் அதற்கான செலவுகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் தவெகவுக்கு மக்கள் சங்கு ஊதுவார்கள் - அதிமுக காளியம்மாள் ஆவேசம்...!
அதேநேரத்தில், சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்திற்கான விஜய்யின் பயணம், தமிழ்நாட்டில் முன்மொழியப்பட்டுள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்துக்கான கட்டமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜனவரி மாதத்தில் மீண்டும் வெளிநாடு செல்ல முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக அண்மைத் தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஜனவரி 18 முதல் 20ஆம் தேதி வரை உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் சுவிட்சர்லாந்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில் லண்டன் பயணம் மேற்கொண்ட நிலையில், ஜனவரியில் மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொண்டு உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்திற்கு வந்த பேரிடி... முதலமைச்சர் விஜய்யா இப்படி செய்தது...!!