×
 

முதல்வர் விஜய் இன்று சொந்த தொகுதிக்கு விஜயம்!!! பெரம்பூருக்கு அதிரடி விசிட்!! மக்களிடம் நேரில் மனு பெறுகிறார்!

பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தை முதல்வர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். மக்களை சந்தித்து இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்குகிறார்.

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று பெரம்பூர் தொகுதியில் பல்வேறு அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். குறிப்பாக பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தை அவர் திறந்து வைப்பதுடன், பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களையும் பெற இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் விதிமுறைகளின்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்து, பெரம்பூர் தொகுதியை தனது சட்டமன்றத் தொகுதியாகத் தேர்வு செய்தார். இதன் மூலம் பெரம்பூர், முதலமைச்சரின் தொகுதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி சர்மா நகரில் அனைத்து வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை இன்று பிற்பகல் 3.30 மணியளவில் முதலமைச்சர் விஜய் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார். இந்த அலுவலகம் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக இருந்தது.

இதையும் படிங்க: 5 நிமிடத்தில் கொத்து பரோட்டா ஆக்கிட்டேன்! முதல்வர் விஜயை மீண்டும் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்! புதிய சர்ச்சை!

அலுவலக திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, அதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அந்த மையத்தின் செயல்பாடுகளை பார்வையிடுவதுடன், தொகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். மேலும், இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு தேவையான சான்றிதழ்களையும் தனது கையால் வழங்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் வியாசர்பாடி மெட்ரோ வளாகத்தில் போக்குவரத்துக் கழகம் அமைத்துள்ள மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தை முதலமைச்சர் பார்வையிடுகிறார். பின்னர் எம்.கே.பி. நகரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், 50 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் அட்டைகளையும் அத்தியாவசிய பொருட்களையும் வழங்க உள்ளார்.

முதலமைச்சரின் இந்த தொடர் நிகழ்ச்சிகளையொட்டி பெரம்பூர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு உடனடி தீர்வு காணும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு! ஆ.ராசா மீது பாய்ந்தது வழக்கு! விரைவில் கைது?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share