×
 
☰

பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்! சொந்த தொகுதியில் மக்களுடன் சந்திப்பு!

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் விஜய் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், அங்கிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் தனது சொந்த தொகுதியான பெரம்பூரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்திற்கு திடீரென சென்றார். அங்கு காத்திருந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

மாதவரம் ஆவின் பால் பண்ணையில் ரூ.2.23 கோடி செலவில் கட்டப்பட்ட மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டிடத்தை விஜய் திறந்து வைத்தார். அதிநவீன கருவிகளுடன் பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யும் வகையில் இந்த ஆய்வக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, மாதவரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ஆவின் பால் பண்ணையின் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

இதையடுத்து பெரம்பூர் தொகுதியில் உள்ள தனது எம்எல்ஏ அலுவலகத்திற்கு விஜய் சென்றார். முதலமைச்சர் திடீரென அலுவலகத்திற்கு வந்ததை பார்த்த அங்கு மனுக்களுடன் காத்திருந்த பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.

இதையும் படிங்க: முதல்வர் விஜய் கலந்து கொண்ட ஆவின் ஆய்வக திறப்பு விழாவில் எழுத்துப்பிழை!! பலகையை பார்த்து அதிர்ந்த மக்கள்!

இலவச வீடு, விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மக்கள் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் விஜய் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வடசென்னை பகுதிகளில் மழைநீர் தேங்கும் பிரச்னை மற்றும் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

எம்எல்ஏ அலுவலகத்தில் த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அலுவலகத்திற்கு வெளியே தன்னை காண திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்தும் அவர் சென்றார்.

சுமார் 10 நிமிடங்கள் அலுவலகத்தில் இருந்த விஜய், பின்னர் தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்டார். ஆவின் பால் விநியோகம் தொடர்பான ஆய்வு மற்றும் அதன்பிறகு தனது தொகுதி மக்களை நேரில் சந்தித்தது என, ஒரே பயணத்தில் இரண்டு முக்கிய நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டது கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திடீர் திருப்பம்! ஐகோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share