×
 
☰

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு பரோல்?! அத்வானிக்கு குறிவைத்தவர்களுக்கு முதல்வர் விஜய் சலுகை ஏன்?!

கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி, கோவையில் பல்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர்; 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கோவை: கடந்த 1998ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 5 பேருக்கு 60 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் இந்த முடிவுக்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், பரோல் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. 

58 பேரை பலிகொண்ட கோர சம்பவம்!

கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி, கோவையில் பல்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பங்கேற்கவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு முன்னதாக இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் 58 பேர் உயிரிழந்தனர்; 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர். 2007ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் பலரைக் குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை வழங்கியது.

இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்துக்கு நோ சொன்ன தமிழக அரசு? புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற்று இடம் ரெடி!

யாருக்கு வழங்கப்பட்டது பரோல்?

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் இருந்த முகமது அன்சாரி, முகமது அலி, மொனப்பா என்ற முகமது ஹசன், முகமது அஜாம், நவாப் கான் ஆகிய 5 பேருக்கு 60 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்கள் மற்றும் உடல்நலக் காரணங்களைக் குறிப்பிட்டு அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஐந்து பேரும் ஏற்கெனவே நீண்டகாலமாக சிறையில் இருந்து வருகின்றனர். 

அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு!

இந்த முடிவை விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர்கள், கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இத்தகைய தீவிரமான குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு நீண்டகால பரோல் வழங்கப்பட்டதற்கான காரணங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

பாஜக மாநிலத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஆகியோர் பரோல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதற்கிடையே, நீண்டகாலமாகச் சிறையில் உள்ள கைதிகளின் விடுதலை தொடர்பான கோரிக்கைகளும் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளன. பரோல் வழங்கப்பட்டதற்கான சட்டப்பூர்வ அடிப்படை, கைதிகளின் தனிப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் அரசின் முடிவு ஆகியவை குறித்து அரசியல் கட்சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், பரோல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கைக்கு அரசு என்ன பதில் அளிக்கப் போகிறது என்பது கவனத்தைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் புதிய சர்ச்சை! கைக்குழந்தைகளுடன் அலையும் தாய்மார்கள்! பெண்கள் வேதனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share