சின்ன தோசைக்காக கல்யாண விருந்தை தவறவிட்ட காங்.,!! முடிந்துபோனதை கிளறும் பிரவீன் சக்கரவர்த்தி!
சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் தவெகவுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் நிர்வாகியும், ராகுலின் நெருங்கிய நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி வெளிப்படையாக கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 28 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது குறித்து, ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும், காங்கிரஸ் நிர்வாகியுமான பிரவீன் சக்கரவர்த்தி வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தி, “புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் என்பதால் ராகுல் முதலில் அங்கு சென்றுள்ளார். அதன் பிறகு தமிழகம் வருவார்.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் குறித்து தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி உண்மைதான். யாருக்கு சீட் கொடுத்தது என்பதில் பிரச்னை இல்லை. ஆனால், 28 அல்லது 30 சீட்கள் மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கப்படுவது 20 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலை. இதற்கு தீர்வு காங்கிரசுக்கு மரியாதை கொடுப்பதும், சீட்களை அதிகரிப்பதும்தான்” என்றார்.
இதையும் படிங்க: உதயசூரியனுக்கு ஓகே சொன்னது ஏன்?! வைகோ மனம் மாறியது எப்படி? துர்கா ஸ்டாலின் மேஜிக்!!
மேலும், “தமிழகத்தில் பாஜகவையும் காங்கிரசையும் ஒப்பிட்டுப் பாருங்கள். தமிழக மக்கள் மதச்சார்பற்ற அரசையே விரும்புகின்றனர். இந்தியாவிலேயே மதச்சார்பற்ற அரசியலை கொண்டு வந்தது காங்கிரஸ்தான். தமிழகத்தில் நாங்கள் ஆட்சியில் இருந்திருக்கிறோம். இன்னும் மக்கள் காமராஜர் ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். நாங்கள் அனுமார் மாதிரி. எங்களின் பலம் எங்களுக்கே தெரியவில்லை” என்று கூறினார்.
தி.மு.க. கூட்டணியில் கூடுதல் இடங்கள் பெற முயற்சித்ததாகவும், “ஒரு பக்கம் ஒரு சின்ன தோசையைக் கொடுத்து பகிர்ந்து சாப்பிடுங்கள் என்றார்கள். மற்றொரு பக்கம் கல்யாண விருந்து வைத்து அழைப்பு விடுத்தார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் 28 இடங்களுக்கு ஒப்புக்கொண்டோம்” என்றும் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
“தமிழகத்தில் எப்போதும் பாஜகவுக்கு இடம் கொடுக்கக் கூடாது. அதைத் தவிர்க்கவே இந்தத் தேர்தலும், தமிழகத்தின் போராட்டமும். கேரளாவில் அடுத்து காங்கிரஸ் முதல்வர் தான். அதேபோல் புதுச்சேரியிலும் இடம் கிடையாது” என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை ஒப்புக்கொண்ட பிரவீன் சக்கரவர்த்தியின் பேச்சு, கூட்டணிக்குள் உள்ள உள் பதற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டீக்கடையில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு!! அதிமுக கூட்டணி கட்சிகள் இரட்டை இலையில் ஏன் போட்டியிடவில்லை?