விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்., + இடதுசாரிகள்!! கூட்டணி பேரத்துக்கு அச்சாரமா? கடுப்பில் திமுக!
ஜன நாயகன் பட ரிலீஸ் தள்ளிப்போனதை கண்டித்து கிரிஸ் ஜோடங்கர், மத்திய அரசை விமர்சித்து, விஜய் மற்றும் கலைத்துறைக்கு ஆதரவு தெரிவித்தார். இதேபோல் இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்குவதில் தொடரும் இழுபறி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கலைத்துறையை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார்.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கிய இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி டியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் 2025 அக்டோபரில் வெளியீடு என அறிவிக்கப்பட்ட இப்படம், பின்னர் ஜனவரி 9, 2026 அன்று ரிலீஸ் என மாற்றப்பட்டது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், சான்றிதழ் தாமதத்தால் படக்குழு வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது.
பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “தவிர்க்க முடியாத சில காரணங்களால் பட வெளியீடு ஒத்திவைக்கப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். ரசிகர்கள் பொறுமையுடன் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜனநாயகன் விஜய்க்கு கை கொடுக்கும் காங்.,! வரிசை கட்டும் தலைவர்கள்! திமுகவுக்கு எதிராக ப்ளான்!
இந்தத் தாமதத்துக்கு மத்திய அரசு வேண்டுமென்றே அரசியல் நெருக்கடி கொடுப்பதாக விஜய் ரசிகர்களும் அரசியல் தரப்புகளும் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர் எக்ஸ் தளத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “பிரதமர் மோடி அவர்களே! விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளத்தக்கவை. ஆனால் ஒரு கலைஞரின் படைப்பை குறிவைப்பது ஏற்க முடியாது.
அரசியல் ஆதாயத்துக்காக சினிமாவைத் தணிக்கை செய்வதை தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலை மற்றும் பொழுதுபோக்குத் துறைகள் அரசியல் போர்க்கருவிகளாக மாறாமல் இருக்க மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். உங்கள் அழுத்தத்தால் அதிகாரிகள் செயல்படுவதால் படம் தாமதமாகிறது.
இது தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் நியாயமல்ல. அரசியலைக் கலைத்துறையிலிருந்து விலக்கி வையுங்கள். நீங்கள் எதிர்கொள்ள வேண்டியது அரசியல்வாதி விஜய்; நடிகர் விஜய் அல்ல. மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் வேலை செய்யாது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸுடன் இடதுசாரிக் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. “ஒன்றிய அரசு விஜய்க்கு மறைமுக நெருக்கடி கொடுக்க நினைக்கிறதா?
‘கந்தன்’ படத்துக்கு சான்றிதழ் கொடுப்பீர்கள்; ஜனநாயகனுக்கு மறுப்பீர்களா? 15 கட் செய்த பின்னரும் சான்றிதழ் மறுப்பது விஜயை அடிபணிய வைக்கும் முயற்சி” என்று அவர்கள் விமர்சித்துள்ளனர். சிபிஎம், சிபிஐ தலைவர்களும் விரைவில் இதே கருத்தைத் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் தற்போது பாஜக-அதிமுக கூட்டணி திமுகவுக்கு எதிராக உள்ளது. ஆனால் விஜயின் தவெக வளர்ந்து வருவதால், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு சவாலாக மாறலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
விஜயை வளர விட்டால் கூட்டணிக் கட்சிகள் தவெக பக்கம் தாவலாம் என திமுகவுக்கு அச்சம் உள்ளது. எனவே காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற கூட்டணிக் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, அவரை வளர்த்து திமுகவை கட்டுப்படுத்தும் திட்டம் இருக்கலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏற்கெனவே காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோர் விஜய்க்கு ஆதரவாகப் பேசிய நிலையில், தற்போது கிரிஸ் ஜோடங்கர் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவு இச்சர்ச்சையை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
இதையும் படிங்க: ஜனநாயகன் விஜய்க்கு கை கொடுக்கும் காங்.,! வரிசை கட்டும் தலைவர்கள்! திமுகவுக்கு எதிராக ப்ளான்!