×
 

ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுக்கு நெருக்கடி! கேரளாவை சுட்டிக் காட்டி செக் வைக்கும் காங்.,! வலுக்கும் கோஷம்!

கேரளாவின் யுடிஎப் மாடலை சுட்டிக் காட்டியதின் மூலம், தமிழகத்திலும் அப்படிப்பட்ட கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதை இதற்கு மேல் தெளிவாக கூற முடியாது.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், கூட்டணி அரசியல் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூர் பொங்கல் திருநாளன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “தை பிறந்தால் வழி பிறக்கும். ஆட்சியில் பங்கு என்றால் என்ன என்பதை அறிய ஒரு மாடல் உண்டு. கேரளாவின் UDF (ஒன்றுபட்ட ஜனநாயக முன்னணி) மாடல் தான் அது. காங்கிரஸ் தலைமை ஏற்று நடத்திய கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையான பாதையை அது காட்டுகிறது.

நட்பும் பங்கும் என்பதே ஒன்றுபட்ட ஜனநாயக முன்னணி அரசியலின் அடித்தளம். தேர்தலுக்குப் பிறகு கூட்டாளிகளை ஒதுக்கும் அரசியல் அங்கு இல்லை. தேர்தலில் கூட்டாளிகளாக இருப்பவர்கள் ஆட்சியிலும் பங்கு பெறும் கூட்டாளிகளாகவே இருக்கிறார்கள். அமைச்சர் பதவிகளும் முக்கியத் துறைகளும் பலத்தையும் உடன்பாட்டையும் பொறுப்பையும் அடிப்படையாகக் கொண்டு பகிரப்படுகின்றன.

இதையும் படிங்க: 30 சீட்டு!! ஒரு எம்.பி போஸ்ட்டு!! எடப்பாடிக்கு பிரேமலதா வைக்கும் நிபந்தனை! கூட்டணியில் இழுபறி!

இதுதான் ஒன்றுபட்ட ஜனநாயக முன்னணி மாடல். மற்ற மாடல்களில் இருந்து வித்தியாசப்படும் மாடல். இந்த UDF மாடல் 2026-ல் தமிழக சட்டசபைத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். நல்ல ஆட்சியாக மாறட்டும். ஆட்சியில் பங்கு வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்.”

இந்தப் பதிவு தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் இதுகுறித்து கூறும்போது, “மாணிக்கம் தாகூரின் இந்தக் கருத்து தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரின் மனநிலையை மிகத் தெளிவாக பிரதிபலிக்கிறது. கேரளாவின் UDF மாடலை சுட்டிக்காட்டியதன் மூலம், தமிழகத்திலும் அத்தகைய கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதை இதற்கு மேல் தெளிவாகச் சொல்ல முடியாது.

திமுக இனியும் பிடிவாதமாக இருக்கக் கூடாது. எங்கள் மீது கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் நடத்தலாம். நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். 2026-ல் அமையும் ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்க வேண்டும். அதில் காங்கிரஸ் கட்சி கட்டாயம் பங்கு பெற வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம். அதை நிறைவேற்றியே காட்டுவோம்” என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தனர்.

இதற்கிடையே, திமுக தரப்பில் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை. ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் “ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகளும், அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்களும் இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல் தேதி!! கூட்டணியில் இழுபறி!! மாநில காங்கிரசாருடன் ராகுல் காந்தி நாளை ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share