×
 

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?! ராகுல்காந்தி யோசிப்பது என்ன? தாமதம்? இழுபறி ஏன்?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீட்டில் இழுபறி நீடித்து வருகின்றது

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு நான்கு நாட்களாக வேட்புமனு தாக்கல் தொடங்கியும், காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை தி.மு.க. தலைமை மார்ச் 28 அன்றே அறிவித்துவிட்டது. ஆனால் வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி நீடிப்பதால், வேட்புமனு தாக்கல் தொடங்கிய நான்கு நாட்களும் காங்கிரஸால் ஒரு வேட்பாளரைக் கூட அறிவிக்க முடியவில்லை. மார்ச் 30, ஏப்ரல் 2, 4, 6 ஆகிய நான்கு நாட்களில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்பதால், கால அவகாசம் வெகுவாகக் குறைந்துள்ளது.

டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற மத்திய தேர்வுக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு வேட்பாளர் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டபோது, ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில தொகுதிகளில் பணம் பெற்றுக்கொண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக புகார்கள் வந்ததால், பட்டியலில் மாற்றம் செய்யுமாறு ராகுல் உத்தரவிட்டுள்ளார். மேலும், தனது அனுமதியின்றி பட்டியலை வெளியிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் பிரசாரம் செய்ய ராகுல்காந்தி தயக்கம்!! திமுக, காங் கூட்டணியில் சர்ச்சை! பின்னணியில் விஜய்?!

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மார்ச் 27 அன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “காங்கிரஸ் தொகுதி தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை. சிலர் விற்றுத்திண்கிறார்கள். உண்மையான தொண்டர்களின் உழைப்பை ஒரு சிலர் விற்றுத் தின்கிறார்கள். இந்த மோசமான சூழலை பொறுக்க முடியவில்லை” என்று அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தப் பதிவு காங்கிரஸ் உள்ளே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தற்போது புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டு ராகுல் காந்தியின் அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி இன்றிரவு டெல்லி திரும்பியவுடன் இறுதி முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட முக்கிய தொகுதிகளில் பொன்னேரி (தனி), திருபெரும்புதூர் (தனி), சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி உள்ளிட்டவை அடங்கும்.

வேட்புமனு தாக்கல் காலக்கெடு நெருங்கும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகாமல் இருப்பது கூட்டணிக் கட்சிகளிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. தரப்பில் இந்த இழுபறிக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பா.சிதம்பரத்தை பிடித்தால் சீட்டு கன்பார்ம்! கூடும் மவுசு! கேட்கும் தொகுதி கிடைக்கும்!! லிஸ்ட் உடன் சுற்றி வரும் நிர்வாகிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share