ஒன்றரை மாதத்திற்கு பிறகு மறுபடியுமா? - நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி...!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசியல் களத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் நல்லகண்ணு. தற்போது 100 வயதாகும் இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தனது வீட்டில் தவறி விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டு நந்தனம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீர் மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவ குழு மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்கு பின் நல்லகண்ணு அக்டோபர் 10ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
அப்போது நல்லகண்ணு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசம் தேவையில்லை என்றும், வயது மூப்பு காரணமாக கண்காணிப்பு மற்றும் மருத்துவ உதவிகள் தேவை என்றாலும், வீட்டில் இருந்த படியே அவர் சிகிச்சை மேற்கொள்ளலாம் என ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: “திருப்பி அடிக்க எனக்கும் தெரியும் திருமா... இந்த மிரட்டுற வேலை எல்லாம் வேணாம்” - நேரடி சவால் விட்ட அண்ணாமலை...!
தற்போது நல்லகண்ணு வீடு திரும்பி ஒரு வாரமே ஆன நிலையில், மீண்டும் இன்று காலை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இது வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனை என்றும் தெரிகிறது. இதனால் விரைவில் அவர் உடல்நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ் மீதான பற்று..!! அசத்திய சுட்டிக்குழந்தை ஆதிரா..!! நான்கரை வயதில் வரலாற்று சாதனை..!!