திமுக - மார்க். கம்யூ.,! தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி!! இறுதிக்கட்ட தொகுதி பங்கீட்டில் நினைத்தது கிடைக்குமா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஏற்றுக்கொள்ளவில்லை.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் இறுதியாகவில்லை. புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்ததால் தொகுதிகளைக் குறைக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தி வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐஎம்) மட்டும் கடும் பிடிவாதம் காட்டி வருகிறது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகள் பெற்ற சிபிஐஎம், இந்த முறையும் குறைந்தபட்சம் 6 தொகுதிகளையாவது பெற வேண்டும் என ஒருமனதாக முடிவு செய்துள்ளது. சில நிர்வாகிகள் 7 தொகுதிகள் வரை கேட்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தி.மு.க. தரப்போ 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என தெரிவித்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறியில் உள்ளது.
நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள சிபிஐஎம் மாநில அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர செயற்குழு மற்றும் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபி மற்றும் முன்னாள் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: திமுக கூட்டணிக்கு Goodbye சொல்லும் வேல்முருகன்?! தமிழக வாழ்வுரிமை கட்சி டிமாண்ட்! மு.க.ஸ்டாலின் ஆலோசனை?!
சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்தக் கூட்டத்தில், தி.மு.க.வுக்கு 6 தொகுதிகளையாவது உறுதி செய்ய வேண்டும் என்பதில் நிர்வாகிகள் உறுதியாக இருந்தனர். ஒருவேளை 5 தொகுதிகள் மட்டுமே கிடைத்தால், சென்னை புறநகரில் உள்ள வேளச்சேரி, பெரம்பூர், வில்லிவாக்கம், மதுரவாயல் ஆகிய தொகுதிகளில் ஒன்றை கேட்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக பெரம்பூரில் ஏற்கனவே 3 முறை வெற்றி பெற்றுள்ளதால் அந்தத் தொகுதியை வலியுறுத்தலாம் எனக் கூறப்பட்டது.
தற்போது தி.மு.க. காங்கிரஸுக்கு 28, இந்திய கம்யூனிஸ்டுக்கு 5, மதிமுகவுக்கு 4, மனித நேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இந்தச் சூழலில் சிபிஐஎம் உறுதியாக 6 அல்லது 7 தொகுதிகள் கேட்பது திமுகவுக்கு சவாலாக அமைந்துள்ளது.
இன்று அல்லது நாளை தி.மு.க.வுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கட்சி தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குமா அல்லது திமுக கூடுதல் தொகுதிகளை விட்டுக்கொடுக்குமா என்பதை இந்தப் பேச்சுவார்த்தையே தீர்மானிக்கும்.
இதையும் படிங்க: டார்ச்லைட்தான்! உதயசூரியன்ல நிக்க மாட்டோம்! திமுகவிடம் முரண்டு பிடிக்கும் மநீம! கதறவிடும் கமல்!