டார்ச்லைட்தான்! உதயசூரியன்ல நிக்க மாட்டோம்! திமுகவிடம் முரண்டு பிடிக்கும் மநீம! கதறவிடும் கமல்!
திமுக மற்றும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு வைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.
சென்னை: திமுக கூட்டணியில் இணைவது குறித்து மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சியுடன் நடைபெற்று வரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இரண்டாவது நாளும் முட்டுக்கட்டையில் முடிந்துள்ளது. சீட் எண்ணிக்கையை விட, சின்னம் குறித்த பிரச்சினையே முக்கிய தடையாக உருவெடுத்துள்ளது.
திமுக, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கடுமையாக நிர்பந்தம் செய்து வருகிறது. ஆனால் மநீம தரப்பு இதை வெளிப்படையாக நிராகரித்துவிட்டது. தாங்கள் டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இந்த சிக்கலை விவாதிக்க நேற்று மாலை கமல் தலைமையில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து நிர்வாகிகளும் ஒரே குரலில் “டார்ச் லைட் சின்னத்தை விட்டுக்கொடுக்க முடியாது” என்று வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: டார்ச் லைட் வேணாம்! உதயசூரியன்லயே நில்லுங்க! கமலிடம் கறார் காட்டும் திமுக! தொகுதி எண்ணிக்கையும் குறைவு!
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மவுரியா, “திமுகவுடன் நடந்த இரு சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. சின்னம் தான் முக்கிய பிரச்சினை. திமுக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்கிறது. நாங்கள் அதை ஏற்கவில்லை. டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் போராடி பெற்றுள்ளோம். அதை விட்டுக்கொடுக்க முடியாது. கண்டிப்பாக அதிலேயே போட்டியிடுவோம்” என்றார்.
தொகுதி எண்ணிக்கை குறித்தும் அவர் பேசுகையில், “நிறைய தொகுதிகள் கேட்டுள்ளோம். எங்கள் சின்னத்தை தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு சீட் எண்ணிக்கை இருக்க வேண்டும். இப்போதைக்கு எத்தனை சீட் என்பதை சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.
கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, தனது அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் திமுக கூட்டணியில் இணைய விரும்புகிறதா அல்லது தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வருமா என்பது அடுத்த 48 மணி நேரத்தில் தெளிவாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைமை இந்த சின்னப் பிரச்சினையில் எந்த நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்தே கூட்டணி இறுதி வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இது நம்ம லிஸ்டல்யே இல்லையே! ஸ்டாலினை ஒரேடியாக புகழும் கமல்.! காங்., நிர்வாகிகள் அதிர்ச்சி!