×
 

ஆ.ராசா பேச்சால் வெடித்த சர்ச்சை! சகிக்க முடியவில்லை! திமுகவின் பேச்சுக்கு எதிராக சண்முகம் கொந்தளிப்பு!!

திமுகவில் கண்ணியமும் கட்டுப்பாடும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என நம்புவதாகவும் பெ.சண்முகம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரின் தாயார் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியதாக கூறப்படும் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற பேச்சுகளை திமுக தலைமை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பெ.சண்முகம் தனது எக்ஸ் தளப் பதிவில், ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். அரசியல் களத்தில் கருத்து வேறுபாடுகள் மற்றும் கொள்கை ரீதியான விமர்சனங்கள் இருக்கலாம் என்றாலும், பெண்கள் மற்றும் அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபகாலமாக திமுகவைச் சேர்ந்த சிலர் பொதுவெளியில் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதாகவும், அத்தகைய பேச்சுகளுக்கு கட்சித் தலைமையே உரிய கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்றும் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: த.வெ.க.வுக்கு ஆதரவா? தேர்தல் புறக்கணிப்பா? இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவு என்ன? இன்று தெரியும்!!

குறிப்பாக, அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டிப்பதுடன், அவரது தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசப்படுவதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசியலில் முதலமைச்சர் விஜய்யின் சட்டமன்றப் பேச்சு மற்றும் அதுதொடர்பான அரசியல் விமர்சனங்கள் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக திமுக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்திலும் ஆ.ராசா பேசிய கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அரசியல் விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்களாக மாறக்கூடாது என்று பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். பொதுவெளியில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும், சம்பந்தப்பட்ட கட்சித் தலைமை அதைக் கண்டித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுகவில் கண்ணியமும் கட்டுப்பாடும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என நம்புவதாகவும் பெ.சண்முகம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆ.ராசாவின் இந்தப் பேச்சைச் சுற்றி தற்போது தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமை தரப்பில் இதுகுறித்து என்ன பதில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share