மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!
கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்.
சிதம்பரம் தொகுதியில் வசிக்கும் சித்தார்த்தன் பெயர் நீக்கப்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் நிர்வாகிகள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கம். பெயரை மீண்டும் சேர்க்ககோரி மனு அளித்ததால் பரபரப்பு
சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் சிதம்பரம் நகரில் வசித்து வருபவர் சித்தார்த்தன். இவர் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது இவர் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு கடுமையாக உழைத்து வருகிறார்.
இந்நிலையில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி சிதம்பரம் நகர வாக்காளர் பட்டியலில் சித்தார்த்தனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் எஸ்ஐஆர் பட்டியல்படி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் மாவட்ட தலைவர் சித்தார்த்தனின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மாவட்டத் தலைவர் சித்தார்த்தனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 3 மசோதாக்களுக்கும் தனித்தனியாக விவாதம் தேவை... காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்..!
இதுபற்றி தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட தலைவர் சித்தார்த்தன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினார். இதையடுத்து சிதம்பரம் வட்டாட்சியரை சந்தித்து தனது பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டது எப்படி என்றும், உடனடியாக தனது பெயரை வாக்காளர் பட்டியல் சேர்க்க வேண்டும் எனவும் கூறி மனு அளித்தார். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் சித்தார்த்தன், கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு எஸ்ஐஆர் படிவம் கொடுத்து பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலிலும் எனது பெயர் இடம் பெற்று இருந்தது. ஆனால் தற்போது வெளியான வாக்காளர் பட்டியலில் எனது பெயர் டெலிட் செய்யப்பட்டிருக்கிறது. நான் எந்த விதத்திலும் எனது பெயரை நீக்க சொல்லவில்லை.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரம் நகரில் ஒரே முகவரியில் வசித்து வருகிறேன். ஒரு வாக்காளர் பெயர் நீக்கப்பட வேண்டும் என்றால், ஒன்று அவர் இறந்திருக்க வேண்டும். அல்லது இந்த ஊரை விட்டு காலி செய்து கொண்டு சென்று இருக்க வேண்டும். ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எனது வாக்கை இந்திய தேர்தல் ஆணையம் நீக்கி இருக்கிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
ஒரு தேசிய கட்சியின் மாவட்ட தலைவரான எனது வாக்கையே நீக்கி இருக்கிறார்கள் என்றால் சாமானிய மக்களின் வாக்குகள் நிலை என்ன ஆகும். நான் இங்குதான் இருக்கிறேன். ஆனால் எனது பெயர் நீக்கப்பட்டு இருக்கிறது. எனது பெயரை காணாமல் போனவர்கள் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். அதை விடுதலை செய்து எனது பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதுகுறித்து சிதம்பரம் தாசில்தாரிடம் மனு அளித்திருக்கிறோம். அவர்கள் நல்லை தீர்வை தருவதாக சொல்லி இருக்கிறார்கள் என கூறினார்.
இதையும் படிங்க: தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!