உங்கள உள்ள விட மாட்டோம்! சி.வி.சண்முகத்திற்கு நோ எண்ட்ரி! விழுப்புரம் அதிமுகவில் முற்றுகிறது மோதல்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் தங்களையும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
சமீப காலமாக அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருந்த சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் திடீரென கூட்டத்துக்கு வந்து மோதல் போக்கைக் காட்டியது உள்ளூர் அதிமுகவினரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களிடம் உறுப்பினர் அட்டை இருப்பதாகவும், தாங்களும் அதிமுகவினர்தான் எனவும் அவர்கள் வாதிட்டனர்.
ஆனால் பசுபதி தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நீண்டது. அங்கு ஏற்கனவே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த பிறகு கட்சிக்குள் உட்கட்சி மோதல்கள் அதிகரித்துள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் சிலருக்கு முக்கிய பொறுப்புகள் பறிக்கப்பட்டன.
இதையும் படிங்க: சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்!! உயிருக்கு அச்சுறுத்தல்! ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்க கோர்ட் உத்தரவு!
சி.வி. சண்முகத்துக்கு இதுவரை எந்த பொறுப்பும் வழங்கப்படாத நிலையில் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். தனது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட பிறகு அலுவலக சாவியை ஒப்படைத்த அவர், தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சூழலில் திண்டிவனம் கூட்டத்தில் ஏற்பட்ட மோதல் அதிமுகவுக்குள் இன்னும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அதிமுகவில் இருந்து பல எம்எல்ஏக்கள் தவெகவுக்கு தாவியுள்ள நிலையில், மீதமுள்ள தலைவர்களிடையேயும் உரசல்கள் அதிகரிப்பது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
விழுப்புரம் சம்பவம் அதிமுகவின் உள் பூசலை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தை எப்படி கையாளப் போகிறார் என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும். தற்போது விழுப்புரம் அதிமுகவில் பதற்றம் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: அதிமுக பிளவை சரி செய்ய போராடும் எடப்பாடி பழனிசாமி! வேலுமணிக்கு பதவி?! சி.வி.சண்முகத்துடன் மோதல்?!