×
 

தயாநிதி மாறன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! தொலைத்தொடர்பு செயலரை சாட்சியாக அழைக்க அனுமதி!

இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.

தி.மு.க., எம்.பி., தயாநிதி மாறன் மீதான தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலரை எதிர்தரப்பு சாட்சியாக அழைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கில் முக்கியமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், 2004 முதல் 2007 வரை தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில், தனது அதிகாரத்தை பயன்படுத்தி பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் அதிவிரைவு தொலைபேசி இணைப்புகளை, அவரது சகோதரர் கலாநிதி மாறன் தொடர்புடைய சன் நெட்வொர்க் நிறுவனத்தின் வர்த்தக பயன்பாட்டுக்கு முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது.

இதையும் படிங்க: “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

இந்த நிலையில், வழக்கில் மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலரின் சாட்சியம் முக்கியமானது எனக் கூறி, அவரை நீதிமன்ற சாட்சியாக ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. குறிப்பாக 2004–07 காலகட்டத்தில் அமைச்சருக்கு வழங்கப்பட்ட தொலைத்தொடர்பு வசதிகளின் வரம்பு மற்றும் அதற்கான நிர்வாக நடைமுறைகளை தெளிவுபடுத்த அவரது சாட்சியம் உதவும் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன், அருண் பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

விசாரணையின்போது, தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, தொலைத்தொடர்புத் துறை செயலரை எதிர்தரப்பு சாட்சியாக அழைக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார். இதற்கு சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூவும் ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார்.

இதையடுத்து, தொலைத்தொடர்புத் துறை செயலரை நீதிமன்ற சாட்சியாக அழைக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதே நேரத்தில், தயாநிதி மாறன் தரப்பு அவரை எதிர்தரப்பு சாட்சியாக விசாரிக்க அனுமதி அளித்து வழக்கை முடித்து வைத்தது.

இதையும் படிங்க: மா. செ. எண்ணிக்கை உயர்வு.? பரபரப்பு அரசியல் களம்... திமுக செயற்குழு கூட்டம் தொடக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share