×
 

குற்றவழக்குகள் துறையில் 'சிபாரிசு நியமனம்'! கேள்விக்குறியாகும் விஜய்யின் ஒளிவுமறைவற்ற நிர்வாகம்!

த.வெ.க., அரசு இந்த விவகாரத்தை விசாரித்து பழைய நடைமுறையை பின்பற்ற அனுமதிக்க வேண்டும். அரசு தேர்வாணையம் மூலமே பணி நியமனம் செய்ய வேண்டும்

சென்னை: அரசு துறை சார்ந்த குற்ற வழக்குகளில் சட்ட ஆலோசனை வழங்கும் தமிழக குற்றவழக்குகள் துறையின் வழக்கறிஞர்கள் நியமனம், அரசு தேர்வாணையம் (TNPSC) மூலமாகவே நடைபெற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. கட்சி சார்புள்ள வழக்கறிஞர்களை நியமிப்பது அரசின் வெளிப்படைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் என அரசு வழக்கறிஞர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

இத்துறையில் அரசு உதவி வழக்கறிஞர், உதவி குற்றவியல் வழக்கறிஞர், உதவி இயக்குநர், துணை இயக்குநர், கூடுதல் இயக்குநர், இயக்குநர் உள்ளிட்ட பதவிகளுக்கு பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வும் வழங்கப்பட்டது. இந்த நடைமுறை அ.தி.மு.க. ஆட்சி வரை தொடர்ந்தது.

ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்த முறை மாற்றப்பட்டது. குறிப்பாக இயக்குநர் பதவிக்கு பதவி உயர்வு அடிப்படையில் தகுதியானவர்களுக்கு பதிலாக, கட்சியைச் சேர்ந்தவர்களை நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையும் படிங்க: 25 ஆண்டுகால திராவிட கட்சிகளின் முறைகேடு! முதல்வர் விஜய் அதிரடி! சூரிய மின் உற்பத்திக்கு இனி பி.எப் கிடையாது!

‘நிர்வாக சீர்திருத்தம்’ என்ற பெயரில் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு நடைமுறைகள் முறைகேடாக மாற்றப்பட்டதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் நியமனங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

தகுதியான பலர் புறக்கணிக்கப்பட்டதோடு, இடமாற்றம் மற்றும் பொறுப்பு பதவிகளுக்கு ரூ.பல லட்சம் பணம் பெறப்பட்டதாகவும் புகார்கள் உள்ளன. விதிகளை மீறி சிலரை துணை இயக்குநர் பொறுப்பில் நியமித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்து பழைய நடைமுறையை மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. அரசு தேர்வாணையம் மூலம் மட்டுமே நியமனங்கள் நடைபெற்றால் துறையில் முறைகேடுகள் குறையும். போலீஸ், நீதிமன்றம் மற்றும் பொதுமக்களிடையே துறையின் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும் என அரசு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கோரிக்கை தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத்துக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 25 ஆண்டுகால திராவிட கட்சிகளின் முறைகேடு! முதல்வர் விஜய் அதிரடி! சூரிய மின் உற்பத்திக்கு இனி பி.எப் கிடையாது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share