×
 

பத்து வருஷமா நீங்க தானே எம்.எல்.ஏ?! உங்ககிட்ட கேப்போம்! திண்டுக்கல் சீனிவாசனை சுத்துப்போட்ட மக்கள்!

நந்தனார்புரம், காந்திநகர் காலனி, செட்டிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு சரியாக ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

நந்தனார்புரம், காந்திநகர் காலனி, செட்டிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் மக்களைச் சந்தித்தபோது, காந்திநகர் காலனியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் சீனிவாசனை சூழ்ந்துகொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பல ஆண்டுகளாக இப்பகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தும், கழிப்பிட வசதி, முறையான குடிநீர் விநியோகம், சமுதாயக் கூடம் போன்ற அடிப்படை வசதிகளை ஏன் செய்து தரவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்பினர். மக்களின் தொடர் கேள்விகளால் சீனிவாசன் திணறிப் போனார்.

இதையும் படிங்க: அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு குறி! நக்சல் ஆதரவு அமைப்பு திட்டம்!! போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு!

அப்போது அவர் கோபமாக, “ஏம்மா என்னை பேச விடுங்க... இப்ப நான் பேசவா வேண்டாமா? ஒரு கட்டுப்பாடு இல்லாம பேசுறீங்களே!” என்று பதிலளித்தார். நிலைமையை சமாளிக்க, அவருடன் சென்ற செட்டிநாயக்கன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தர்மராஜ், சீனிவாசனிடமிருந்து மைக்கை வாங்கி பேச முயன்றார். 

“மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்” என்று சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் மக்கள் விடாப்பிடியாக, “கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள்தானே எம்.எல்.ஏ-வாக இருந்தீர்கள். அப்போதெல்லாம் ஏன் இந்த வசதிகளை செய்யவில்லை?” என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு சீனிவாசன், “நாங்கள் இப்போது எதிர்க்கட்சி. ஆளும் கட்சியிடம் போய் கேளுங்கள்” என்று பதிலளித்தார். உடனே மக்கள், “நீங்கள்தானே எங்கள் பகுதி எம்.எல்.ஏ. உங்களிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது?” என்று மீண்டும் கேட்டனர்.

மக்களின் தொடர் கேள்விகளால் திணறிய சீனிவாசன், பிரசாரத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு அங்கிருந்து விரைந்து சென்றார். இந்த சம்பவம் திண்டுக்கல் தொகுதியில் பெரும் பேச்சாக மாறியுள்ளது.

தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது ஏற்பட்ட இந்த சங்கடமான சம்பவம், அதிமுகவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: வாயை விட்டு வசமாய் மாட்டிய உதயநிதி ஸ்டாலின்! என் குடும்பத்தையே இழிவு படுத்திட்டாரு! கொதிக்கும் வேட்பாளர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share