மதுரை பிள்ளையை வெல்வாரா கோவை மா 'பிள்ளை'..? சுந்தர்.சியை இறக்கி மத்தியில் சாதி அரசியல்..!
திமுகவுக்கு நேரடி சவால் விடும் வகையில் மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர் சியைக் களமிறக்கியுள்ளது என்.டி.ஏ. கூட்டணி.
மதுரை மத்திய தொகுதியை திமுகவின் கோட்டை என்று சொல்லு அளவிற்கு பலப்படுத்தி வைத்திருக்கிறார் சிட்டிங் எம்.எல்.ஏ. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவாக, திமுக சார்பில் போட்டியிட்டுத் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். தற்போதைய அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.
‘வாக்குக்குப் பணம் கொடுக்காதவர், பொய்யான வாக்குறுதி அளிக்காதவர்’ என்று பெயரெடுத்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு மதுரையில் செல்வாக்கு அதிகம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பணிகள், புதிய திட்டங்கள் குறித்த அறிக்கையை வீடு வீடாக சென்று வழங்குவது, சோஷியல் மீடியாவில் பதிவிடுவது என படு ஆக்டீவாக இருக்கக்கூடியவர். மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க, தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் புகார்ப் பெட்டி வைத்திருக்கிறார்.
அப்படி பி.டி.ஆர். செல்வாக்கு செலுத்தி வரும் மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை வைத்து சதுரங்க ஆட்டத்தை தொடங்கியுள்ளது என்.டி.ஏ. கூட்டணி. அதிமுக - பாஜக கூட்டணி அமைய மிக முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ஏ.சி.சண்முகம். சமீபத்தில் அதற்கு பலனாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் ஒரு தொகுதியும், பாஜக சார்பில் ஒரு தொகுதியும் இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரவுடி கலாச்சாரத்தை ஏவும் தவெக... விஜய் மேல case போடுங்க... பொன்ராஜ் புகார் மனு..!!
அப்படி அதிமுக சார்பில் ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியாக மதுரை மத்திய கிழக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதியில் பிடிஆரை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதை நன்கு அறித்த ஏ.சி.சண்முகம், இயக்குநர் சுந்தர் சி-யை களமிறக்கியுள்ளார். ஒட்டுமொத்த மதுரை மாவட்டத்திற்கு நன்கு பரீட்சயமான முகமான பி.டி.ஆருக்கு எதிராக, தனது சினிமா மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சுந்தர் சி-யை களமிறங்கியுள்ளார்.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கொண்டைக்கட்டி தொண்டைமண்டல வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர், இதனால் அவரை எதிர்த்து போட்டியிட அதே பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த சுந்தர் சி களமிறக்கப்பட்டுளார். இதனை மதுரை மண்ணின் மைந்தர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே வேட்பாளர் அறிவிப்பு குறித்த அறிக்கையில் “சுந்தர் சி., சன் ஆஃப் சிதம்பரம் பிள்ளை” என அந்த பிள்ளை என்ற வார்த்தையை அழுத்தி பதிவு செய்துள்ளார்.
இதன் மூலம் குறிப்பிட்ட சாதி வாக்குகளை பிரித்து, பிடிஆர் வெற்றியில் சரிவை ஏற்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டுள்ளது. தேர்தலின் போது சாதி அரசியல் இயல்பானது தான் என்றாலும், மதுரை மத்தியில் களமிறங்கும் பிடிஆர் மண்ணின் மைந்தன், அவரை எதிர்த்து போட்டியிடும் சுந்தர் சியோ கோவையை சொந்த ஊராக கொண்டவர். எனவே மண்ணை நேசிக்கும் மதுரைக்காரர்கள் சுந்தர் சியை வரவேற்பார்களா? என பொறுத்திருந்து பார்க்கலாம்...
இதையும் படிங்க: மிகப்பெரிய ஆறுதல்! மேலும் 2 கப்பல்கள் பெட்ரோலிய பொருட்களுடன் இந்தியா வருகை!