மீண்டும் தேமுதிக -அதிமுக கூட்டணி? பிரேமலதாவுடன் அதிமுக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை...!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன் அதிமுக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக வெற்றி கழகத்திற்கு கூட்டணி அழைப்பு விடுத்தார். அதனை தமிழக வெற்றி கழகம் நிராகரித்தது. ஏற்கனவே தேமுதிக அதிமுக கூட்டணி இருந்து வந்தது. மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா? அல்லது வேறு கூட்டணிக்கு செல்லுமா என்பது தொடர்பான சந்தேகம் எழுந்தது.
இதுவரை தேமுதிக தங்களது கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை. எனவே விஜய் கட்சியுடன் விஜயகாந்த் கட்சி கூட்டணி அமைக்க உள்ளது என தகவல் கசிந்தது. விஜயுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதா என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு விஜயுடன் எந்த கூட்டணி பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். விஜய் முதலில் களத்திற்கு வரவேண்டும் என்று தெரிவித்தார். விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விஜய் குறித்த கேள்விகளுக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என்று கூறினார் . தேமுதிகவில் இருப்பவர்கள் கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சரவையிலும் இடம்பெறுவார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் 65 பேர் உயிரிழப்பு... எடப்பாடி பழனிச்சாமியை எகிறி அடித்த மா.சு...!
விஜயுடன் கூட்டணி இல்லை என அறிவித்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் சந்தித்தார். மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரேமலதாவை ஆர் பி உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகாக சந்தித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: போலி வாக்குகளை செருகுவதில் திமுக தீவிரம்... தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்...!