×
 

"யார் கூட கைக்கோர்க்கப் போறாங்க?" இன்னைக்கு தெரியப்போகுது தேமுதிக-வோட 'மெகா கூட்டணி' அறிவிப்பு!

 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கும் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இன்று மிக விமரிசையாக நடைபெறுகிறது.

தேமுதிக தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் பிரம்மாண்ட மாநில மாநாடு இது என்பதால், ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தின் பார்வையும் இன்று கடலூர் பக்கம் திரும்பியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பாசார் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மாநாட்டுப் பந்தலில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகச் சாலையின் இருபுறமும் கட்சித் தோரணங்கள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டுப் பாசார் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மாநாட்டுத் திடலுக்குத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு வருகை தந்து கட்சியின் முரசு கொடியை ஏற்றி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் பற்றிய கவிதை வாசிப்பு, "கேப்டனின் சாதனைக்குக் காரணம் சினிமாவா? அரசியலா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம், கானா பாலா மற்றும் செந்தில்-ராஜலெட்சுமி ஆகியோரின் இசைக்கச்சேரி எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மாலை வரை நடைபெறவுள்ளன. மாலை 6 மணியளவில் மாநாடு அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இதில் தலைமை வகித்துச் சிறப்புரையாற்றும் பிரேமலதா விஜயகாந்த், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை அறிவிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: “பாமக கூட்டணியில் இருந்தபோதும் நாங்கள் வென்றோம்!” திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு அதிரடி பேட்டி

சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், 60% நிர்வாகிகள் திமுக உடனும், 40% நிர்வாகிகள் அதிமுக உடனும் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்ததாகத் தகவல்கள் கசிந்துள்ளன. தற்போது அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தேமுதிகவின் இந்த அறிவிப்பு தமிழகத்தின் பலமுனைப் போட்டியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் பல முக்கியத் தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளன. தொண்டர்களுக்கான உணவு, குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: "சீட் தருவதாக சொன்னால் நம்பி ஏமாறாதீர்கள்!" அதிமுக வேட்பாளர் நேர்காணல் குறித்து இபிஎஸ் எச்சரிக்கை! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share