DMDK vs NDA: விஜயகாந்த் ஆசைப்பட்டது இதுதான்! – தேமுதிகவிற்கு வலைவீசும் பொன்.ராதாகிருஷ்ணன்!
ஊழலற்ற ஆட்சியை அமைக்க தேமுதிக மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு வர வேண்டும் எனப் பொன்.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
தேமுதிக நிறுவனர் 'கேப்டன்' விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தேமுதிக இணைய வேண்டும் என வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.
கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "விஜயகாந்த் ஒரு மகத்தான மனிதர்; அரசியலில் தூய்மையையும் நேர்மையையும் கடைபிடித்தவர். தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் கனவாக இருந்தது. அவர் விரும்பிய அந்த லட்சிய ஆட்சியைத் தமிழகத்தில் ஏற்படுத்த தேமுதிக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும். 2014 மக்களவைத் தேர்தலில் வலிமையான கூட்டணி அமைய விஜயகாந்தின் பங்களிப்பு மிக முக்கியமானது. அந்தப் பழைய நட்பு இப்போதும் தொடர்கிறது" எனத் தெரிவித்தார். மேலும், கேப்டனின் பாதையை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.
விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை முதலே கோயம்பேட்டில் உள்ள 'கேப்டன் இல்லத்தில்' தொண்டர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் குவிந்து வருகின்றனர். பாஜக நிர்வாகிகள் தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்திய நிலையில், "தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும்" என்ற கருத்தை முன்வைத்தனர். ஏற்கனவே விஜய்க்குப் பாஜக அழைப்பு விடுத்து வரும் நிலையில், தற்போது தேமுதிக-விற்கும் பொன். ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை இப்போதே சூடுபிடிக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: "திமுக அரசே, போராட்டத்தை ஒடுக்காதே!" - எச்சரித்த பிரேமலதா விஜயகாந்த்!
இதையும் படிங்க: "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0": தேமுதிக கடலூர் நாட்டிற்கு பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு!