இந்த தொகுதிகள்லாம் எங்களுக்கு ஒதுக்கிருங்க! லிஸ்ட் போட்டு நீட்டிய கூட்டணி கட்சிகள்! குழப்பத்தில் திமுக!
திமுக கூட்டணியில், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், உள்ளிட்ட கட்சிகளுக்கு, எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என இன்னும் முடிவாகவில்லை.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான திமுக கூட்டணி தொகுதி ஒதுக்கீடு பணி இன்னும் முடிவடையாத நிலையில், கூட்டணிக் கட்சிகள் தங்கள் விருப்பத் தொகுதி பட்டியலை திமுக தலைமையிடம் சமர்ப்பித்துள்ளன. இதில் காங்கிரஸ் 28 தொகுதிகளை கோரியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை நேற்று திமுகவிடம் அளித்தன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தளி, திருத்துறைப்பூண்டி, நாகை, வால்பாறை, தொண்டாமுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருப்பூர், பவானிசாகர், பழனி, சிவகங்கை ஆகிய 10 தொகுதிகளில் இருந்து 5 தொகுதிகளை ஒதுக்குமாறு கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 10க்கு 1 குறைஞ்சாலும் எங்களுக்கு வேண்டாம்! விலகிக்கிறோம்! திமுக கூட்டணியில் திடீர் போர்க்குரல்!! கலக்கத்தில் பிரேமலதா!!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், கடையநல்லூர், பாளையங்கோட்டை, பாபநாசம் ஆகிய 3 தொகுதிகளில் இரண்டை கேட்டுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திருச்செங்கோடு, பொள்ளாச்சி, மொடக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளில் 2-ஐ கோரியுள்ளது. மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம், திருவாடானை, ஆம்பூர், பாளையங்கோட்டை, நாகை, பாபநாசம் ஆகிய 5 தொகுதிகளில் 2-ஐ விரும்புகிறது.
மதிமுக, 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மதுரை தெற்கு, திருச்சி கிழக்கு, மணப்பாறை, சாத்தூர், வேளச்சேரி, கோவில்பட்டி, கடலூர், புவனகிரி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை உள்ளிட்ட 10 தொகுதிகளை விருப்பப் பட்டியலாக சமர்ப்பித்துள்ளது.
காங்கிரஸ் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 39 தொகுதிகளை தேர்வு செய்து, அதில் இருந்து 28 தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் தலைமை தாங்கினார்.
தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கான ஒதுக்கீடு இன்னும் இறுதியாகவில்லை. இதனால் கூட்டணியில் பதற்றம் நிலவுகிறது.
தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை அடுத்த சில நாட்களில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டார்ச் லைட் வேணாம்! உதயசூரியன்லயே நில்லுங்க! கமலிடம் கறார் காட்டும் திமுக! தொகுதி எண்ணிக்கையும் குறைவு!