உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் நிற்கிறது!! நெல்லை பிரசாரத்தில் திமுகவுக்கு ஷாக் கொடுத்த விஜய்!!
''சில பல கோடிகளை கொடுத்து தமிழ்நாட்டு காங்கிரசை திமுக பையில் போட்டுக் கொண்டது. ஆனால், உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் நிற்கிறது,'' என்று திருநெல்வேலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் பேசினார்.
திருநெல்வேலி K.T.C. நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார். “சில பல கோடிகளை கொடுத்து தமிழ்நாட்டு காங்கிரசை தி.மு.க. பையில் போட்டுக் கொண்டது. ஆனால் உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் நிற்கிறது” என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி மக்களுக்கு வணக்கம் தெரிவித்த விஜய், “இந்த நேரம் ஸ்டாலின் சாருக்கு முழு அதிகாரம் இருந்திருந்தால் இந்தக் கூட்டம் நடந்திருக்காது. ஏதாவது முட்டுக்கட்டை போட்டு என்னை வரவிடாமல் செய்திருப்பார். அதிகாரமில்லாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்” என்றார்.
தி.மு.க. அரசு தனக்கும் தவெகவுக்கும் எவ்வளவு நெருக்கடிகள், அவதூறுகள் பரப்பியது என்று சுட்டிக்காட்டிய விஜய், “தி.மு.க. கூட்டணியும் பாஜக கூட்டணியும் வெளியில் தனித்தனியாக இருப்பது போல் தெரிகிறது. ஆனால் உள்ளுக்குள் இருவரும் ஒன்றுதான். ஒரே நோக்கம் – விஜய் வரக்கூடாது என்பதுதான். நான் வந்ததிலிருந்து அவர்களால் ஊழல் செய்ய முடியவில்லை. எல்லாவற்றிலும் மண் விழுந்துவிட்டது. அதனால்தான் என் மீது கோபம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: தமிழக தேர்தல் ஏற்பாடுகள் எப்படி? பாதுகாப்பு போதுமா? தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை!
“கோபத்தில் இருக்கிறார்கள். ஆட்சிக்கு வர முடியாத சூழலை மக்கள் உருவாக்கிவிட்டார்கள். கல்லாப்பெட்டி கூட்டணி எல்லாம் இப்போது கலகலத்துப் போய் நிற்கிறது” என்று விஜய் விமர்சித்தார். தி.மு.க. கூட்டணியில் கூட கூட்டணிக் கட்சியினர் ஒருவருக்கொருவர் ஓட்டு போட மாட்டார்கள் போல் தெரிகிறது என்றும், பாஜக கூட்டணியின் நிலை இன்னும் மோசமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
“சில பல கோடிகளை கொடுத்து தமிழக காங்கிரசை ஸ்டாலின் சார் பையில் போட்டுக் கொண்டார். ஆனால் உண்மையான காங்கிரஸ் நம்முடன் நிற்கிறது” என்ற விஜய்யின் கருத்து கூட்டத்தில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
சிறுபான்மையினர் மீது தி.மு.க.வின் “சாயம்” வெளுத்துப் போய்விட்டதாகவும், அவர்கள் தவெக பக்கம் நிற்பதாகவும் விஜய் தெரிவித்தார். 33 ஆண்டுகளாக மக்கள் மனதில் இடம் பிடிக்க தான் பட்ட கஷ்டத்தை நினைவுகூர்ந்த அவர், “இது மற்றவர்களுக்கு தேர்தல். எனக்கும் என் கூட நிற்பவர்களுக்கும் இது எமோஷன்” என்றார்.
“ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள். இது விசில் சின்ன புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய விஜய், “நான் தன்னந்தனி ஆளு” என்ற பாடலை பாடினார். “உங்கள் விஜய் நான் வர்றேன். விசில் அடிக்க ரெடியா? நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்” என்று கூட்டத்தை உற்சாகப்படுத்தினார்.
திருநெல்வேலியில் விஜய்யின் இந்த பிரசாரம் தவெகவுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. தி.மு.க. மற்றும் பாஜக இரு அணிகளையும் ஒரே நேரத்தில் விமர்சித்த விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: Exit Poll Ban!! 5 மாநில தேர்தல் நிலவரம்!! கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை!!