கூட்டணிக்கு சரிபட்டு வரலையா? காங்கிரசை உடைச்சிருவோம்!! ஓட்டு கை நழுவாமல் இருக்க ஸ்டாலின் வியூகம்!
தமிழகத்தில், 2004 முதல் 22 ஆண்டுகளாக, தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. ஆனாலும், காங்கிரசுடன் சுமுகமாக தொகுதி பங்கீட்டை முடிக்க முடியாமல் தி.மு.க., திணறி வருகிறது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டில் பெரும் இழுபறி நீடிக்கிறது. 2004 முதல் 22 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ், இம்முறை குறைந்தபட்சம் 41 சட்டமன்ற தொகுதிகள், 2 ராஜ்யசபா எம்பி, ஆட்சியில் பங்கு என கோரி வருகிறது. ஆனால் திமுக தலைமை 25 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் மட்டுமே வழங்க முன்வந்துள்ளது. இதற்கு மேல் ஒரு சீட் கூட கிடையாது என திட்டவட்டமாக கூறியுள்ளது.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் ராகுல் காந்தியிடம் "எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும்" என வலியுறுத்தினார். அதன்படி நவம்பர் 22ஆம் தேதி ஐவர் குழு அமைக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இழுபறியாக உள்ளன. திமுக தரப்பில் "நாம் தரும் சீட்களை ஏற்றுக்கொள்ளுங்கள்" என 'டேக் இட் ஆர் லீவ் இட்' போக்கு நீடிக்கிறது.
திமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஸ்டாலின் இம்முறை 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்ல விரும்புகிறார். திமுக சின்னத்தில் அதிக எம்எல்ஏக்கள் வேண்டும் என ஆசைப்படுகிறார். சிறிய கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் சீட்களை கொடுக்க தயார். ஆனால் காங்கிரஸ் தனி சின்னத்தில் போட்டியிடும் என்பதால் 25க்கு மேல் கொடுக்க விரும்பவில்லை" என்றார்.
இதையும் படிங்க: காங்., கேட்பதில் என்ன தப்பு? ஆட்சி அதிகார பகிர்வு! ஆட்டத்தை ஆரம்பித்தார் திருமாவளவன்!
காங்கிரஸ் தரப்பில் ஆட்சி பங்கு கோருவது, தவெக விஜய்க்கு ஆதரவாக நிலைப்பாடு எடுப்பது போன்ற செயல்கள் ஸ்டாலினை அதிருப்தியடையச் செய்துள்ளன. கருணாநிதி சாதிக்காததை ஸ்டாலின் சாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். "காங்கிரஸ் திமுக கொடுக்கும் சீட்களை ஏற்றால் நல்லது. இல்லையெனில் காங்கிரஸில் திமுக ஆதரவு தலைவர்களை வைத்து கட்சியை உடைக்க தயார்" என அவர் எச்சரித்தார்.
1996இல் மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் பிரிந்ததை நினைவூட்டி, "மீண்டும் காங்கிரஸ் பிளவுபட வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்" என்றார். ராஜ்யசபா தேர்தல் வேட்புமனு தாக்கல் மார்ச் 5ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், திமுக மார்ச் 3ஆம் தேதி கெடு விதித்துள்ளது. காங்கிரஸ் ஏற்காவிட்டால் ராஜ்யசபா வேட்பாளர்களை தனியாக அறிவிக்க திமுக தயாராக உள்ளது.
இந்த இழுபறி திமுக-காங்கிரஸ் கூட்டணியின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கூட்டணி தொடருமா அல்லது பிளவா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் அப்செட்! செல்வப்பெருந்தகை முயற்சி டோட்டல் வேஸ்ட்! திமுக - காங்., கூட்டணியில் பெரிய ஓட்டை!