இந்தி எதிர்ப்பு வேணாமே? நமக்கே பொல்லாப்பா போகும்! மொழி அரசியலை தவிர்க்கும் திமுக அமைச்சர்கள்!!
இந்தி எதிர்ப்பு அரசியலை மையப்படுத்தினால், சட்டசபை தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என கருதி, மொழி அரசியலை முன்னெடுக்க, தி.மு.க., அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவின் மொழி அரசியல் அணுகுமுறை குறித்து கட்சியின் உள்ளேயே தயக்கம் எழுந்துள்ளது. இந்தி மொழி எதிர்ப்பை மையப்படுத்தினால், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் பெரும் பின்னடைவு ஏற்படும் என கருதி, பல மாவட்டச் செயலர்கள் மற்றும் அமைச்சர்கள் மொழி அரசியலை முன்னெடுப்பதில் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1960-களில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் திமுகவுக்கு பெரும் வெற்றியை தந்தன. அந்த அடிப்படையில் ஆட்சியை பிடித்த கட்சி, பின்னர் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. "இது கொள்கை கூட்டணி அல்ல, தேர்தல் கூட்டணி" என திமுக தரப்பு விளக்கம் அளித்தது. கடந்த 22 ஆண்டுகளாக திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இந்தி எதிர்ப்பு அரசியல் முன்னிலை பெறவில்லை. ஆனால் இப்போது 'தீ பரவட்டும்' என்ற தலைப்பில் இந்தி எதிர்ப்பை தீவிரப்படுத்தியுள்ளது திமுக.
மொழிப்போர் தியாகிகள் நாள் கொண்டாட்டத்தில் சென்னை மூலக்கோட்டையில் தாளமுத்து, நடராஜன், தருமாம்பாள் நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கருப்பு டி-சர்ட், பேன்ட் அணிந்து பேரணியாக பங்கேற்றனர்.
இதையும் படிங்க: சொன்னபடி தை பிறந்தாச்சு!! வழி பிறக்குமா? இன்று கூட்டணியை அறிவிக்கிறார் ஓ.பி.எஸ்? யாருடன் கை கோர்ப்பு?
காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், "வரும் தேர்தல் ஆரிய-திராவிடப் போர்; 2026 தேர்தல் திராவிடப் போரின் மற்றொரு களம்; டில்லி ஆதிக்கத்துக்கு தமிழகம் தலைகுனியாது" என்று வலியுறுத்தினார்.
ஆனால் சென்னை, காஞ்சிபுரம் தவிர மற்ற மாவட்டங்களில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டங்களுக்கு மாணவர்களை அழைத்து வருவதில் திமுக மாவட்டச் செயலர்கள், அமைச்சர்கள் பெரும் தயக்கம் காட்டியுள்ளனர்.
கட்சி வட்டாரங்கள் கூறுகையில், "இன்றைய இளைஞர்கள், மாணவர்களுக்கு ஹிந்தி மொழி தடையாக இல்லை. மாறாக கூடுதல் திறமையாகவே பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பு, கல்வி வளர்ச்சியில் ஹிந்தி அறிவு உதவியாக இருக்கிறது. மாணவர்களை மையப்படுத்தி மொழி அரசியல் செய்தால் தேர்தலில் கடும் பின்னடைவு ஏற்படும்" என்பதால் தயக்கம் ஏற்பட்டுள்ளது.
மூத்த நிர்வாகிகள் பலர், தேர்தல் அறிக்கையில் இளைஞர்களின் எதிர்காலம், வேலைவாய்ப்பு, கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்தி எதிர்ப்பு அரசியல் தொண்டர்களை உற்சாகப்படுத்தினாலும், இளைஞர்களிடம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சுகின்றனர். இதனால் கட்சியின் உள்ளேயே இரு வித கருத்துகள் மோதிக்கொள்கின்றன.
2026 தேர்தலில் திமுக எந்த அணுகுமுறையை மேற்கொள்ளும்? இந்தி எதிர்ப்பை தீவிரப்படுத்தினால் பழைய வெற்றி கிடைக்குமா? அல்லது இளைஞர்களை ஈர்க்கும் புதிய உத்தியா? கட்சி தலைமை விரைவில் தெளிவான முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தயக்கம் தேர்தல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என அரசியல் வட்டாரங்கள் கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: இதமட்டும் பிரதமர் மோடிகிட்ட கேட்டு சொல்லுங்க!! எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் வச்ச ரெக்விஸ்ட்!