"திமுக தீயசக்தி அல்ல, ஜனநாயக சக்தி" - விஜய்யின் விமர்சனத்திற்கு வீரபாண்டியன் பதிலடி!!
திமுக என்பது தீயசக்தி அல்ல, அது ஒரு மாபெரும் ஜனநாயக சக்தி; ஜாதியாலும் மதத்தாலும் மக்களைப் பிளவுபடுத்துபவர்களே உண்மையான தீயசக்திகள் என விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 'மக்கள் சந்திப்பு இயக்கத்தை' இன்று தொடங்கி வைத்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை அவர் கடுமையாகச் சாடினார்.
செய்தியாளர்களிடம் பேசிய வீரபாண்டியன், "திமுக ஒன்றும் தீயசக்தி அல்ல, அது ஒரு மாபெரும் ஜனநாயக சக்தி. சாதி, மதத்தால் மக்களைப் பிளவுபடுத்துபவர்களே உண்மையான தீயசக்திகள். நடிகர் விஜய் இப்போதுதான் அரசியலில் முதல் அடி எடுத்து வைக்கிறார். அவர் இன்னும் படிக்க வேண்டிய பாடங்களும், பெற வேண்டிய அனுபவங்களும் நிறைய இருக்கிறது என்பதை அவரது வார்த்தைகளே தெளிவுபடுத்துகின்றன" என்று ‘பஞ்ச்’ வைத்தார். மேலும், நெல்லையில் பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைத்திருப்பதை வரவேற்ற அவர், தமிழர்களின் தொன்மையை மூடி மறைக்கப் பார்க்கும் ஒன்றிய அரசின் முயற்சி ஒருபோதும் பலிக்காது என்றார். கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வைத்து இடது சாரிகள் துடைத்து எறியப்பட்டதாகப் பிம்பத்தை உருவாக்க வேண்டாம் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் இடது சாரிகள் அங்குப் பிரம்மாண்ட வெற்றி பெறுவார்கள் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “97 லட்சம் பெயர் நீக்கம்” – முதல்வர் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
கூட்டணி குறித்துப் பேசிய அவர், "திமுக கூட்டணி ஒரு கொள்கை கூட்டணி. கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் இடங்களைக் கேட்பதற்கான தார்மீக பலம் கொண்ட கட்சி. எங்களது போராட்ட வரலாற்றை அறிந்தவர் முதல்வர் ஸ்டாலின். எனவே, தொகுதிகளைக் கூடுதலாகக் கேட்கும்போது சூழலைப் பொறுத்து அவர் உரிய முறையில் பரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு" என்றார். 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியது காந்தியின் மீதான தாக்குதல் என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய வெறுப்பு அரசியலைத் தமிழ் மண் ஏற்காது என்றும், திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் பதற்றத்தை உருவாக்கப் பார்க்கும் சங்பரிவார் அமைப்புகளின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு தாவிய 30 தவெகவினர்..!! செங்கோட்டையன் கோட்டைக்குள் நுழைந்த செந்தில் பாலாஜி..!!