21 கூட்டணி கட்சிகளுடன் களமிறங்கும் திமுக! வாக்கு சிதறலை தடுக்க மெகா வியூகம்!! ஸ்டாலின் ஃபார்முலா!
புதிய அரசியல் வரவுகள் மற்றும் வாக்குகளின் சிதறலைத் தடுக்கவே இந்த மெகா கூட்டணி வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக கூட்டணியை வரலாறு காணாத அளவுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 13 கட்சிகளுடன் களமிறங்கிய திமுக, இம்முறை 21 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. புதிய அரசியல் வரவுகள், வாக்கு சிதறலைத் தடுக்கும் வியூகம் இதற்கு காரணம்.
ஆனால், கூட்டணி விரிவடைந்தாலும் பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸுடன் தொகுதி பங்கீட்டில் பெரிய உரசல் நீடிக்கிறது. காங்கிரஸ் இம்முறை 38-40 தொகுதிகளை கோரியுள்ளது. கடந்த 2021-ல் 25 தொகுதிகளைப் பெற்று 18 இடங்களில் வென்ற காங்கிரஸ், இப்போது அதிக இடங்கள் மட்டுமின்றி ஆட்சியில் பங்கு (பவர் ஷேரிங்) கோரி வருகிறது.
ஆனால் திமுக தரப்போ, கூட்டணி கட்சிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் காங்கிரஸுக்கு 32 தொகுதிகளுக்குள் ஒதுக்க முடிவு செய்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தைகள் இழுபறியாக உள்ளன.
இதையும் படிங்க: அய்யா தரப்புக்கு 3 தொகுதி!! திமுக - பாமக டீல் ஓவர்! அமைச்சர் எ.வ.வேலு தலையீட்டால் திருமாவளவன் டென்சன்!
இந்த சிக்கலை சுமூகமாக தீர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சகோதரியும் எம்பியுமான கனிமொழியை டெல்லி அனுப்பியுள்ளார். டெல்லி அரசியலில் செல்வாக்கு மிக்க கனிமொழி விரைவில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். காங்கிரஸின் பிடிவாதத்தைக் குறைத்து, இரு தரப்புக்கும் ஏற்புடைய எண்ணிக்கையை இறுதி செய்வதே அவரது முக்கிய பணி.
இந்த இழுபறியால் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுகவின் 'பெரியண்ணன்' மனப்பான்மையால் சலிப்படைந்த சிலர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக போன்ற புதிய கட்சிகள் அதிக இடங்கள், அதிகாரப் பங்கு தர முன்வரலாம் என்பதால், இது திமுகவுக்கு மறைமுக அழுத்தமாக உருவெடுத்துள்ளது.
கடந்த 2021-ல் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது. விசிக், சிபிஐ, சிபிஎம், மதிமுக தலா 6 தொகுதிகள், ஐயுஎம்எல் 3 தொகுதிகள் பெற்றன. மற்ற சிறிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. இம்முறை கூட்டணி 21 ஆக உயர்வதால், ஒவ்வொரு கட்சிக்கும் இடங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. திமுக 30-க்குள் சுருக்க நினைக்க, காங்கிரஸ் 40-ல் உறுதியாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நீதி மய்யத்துக்கு 2 இடங்கள் (கமல் ஹாசனுக்கு ராஜ்யசபா எம்பி கொடுத்தது 6க்கு சமம் என்ற கணக்கு), பாமக ராமதாஸ் அணிக்கு 3 இடங்கள் வாய்ப்பு உள்ளது. தேமுதிக இரட்டை இலக்க தொகுதிகள் (10+) கோரினாலும், திமுக ஒற்றை இலக்கத்தில் (ஆனால் கொஞ்சம் அதிகம்) கொடுக்க முன்வந்துள்ளது.
கனிமொழியின் டெல்லி பயணம் வெற்றி பெறுமா? காங்கிரஸ் திமுகவுடன் தொடருமா அல்லது விஜய்யை நோக்கி திரும்புமா? அடுத்த சில தினங்களில் தெரிந்துவிடும். தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடித்து வருகிறது!
இதையும் படிங்க: ராமதாஸ் வந்தால் விசிக விலகும்! திமுகவுக்கு செக் வைக்கும் திருமாவளவன்! தவெகவுக்கு சிக்னல்!!