முற்றும் வார்த்தை போர்... “கட்டிடம் சென்னையில்... கட்டளை டெல்லியில்” - இபிஎஸை வெளுத்து வாங்கிய கனிமொழி...!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக எம்.பி. கனிமொழி இடையிலான வார்த்தை போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது.
அதிமுக அலுவலகம் டெல்லியில் உள்ள அமித்ஷா வீட்டிற்கு மாறிவிட்டதாக திமுக எம்பி கனிமொழி விமர்சித்த நிலையில், அதிமுக அலுவலகம் சென்னையில் தான் இருக்கிறது என்றும் வேண்டுமென்றால் வந்து பார்த்துவிட்டு செல்லுங்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருந்தார். அதோடு அதிமுக அலுவலகத்தை ஆள் வைத்து உடைக்க பார்த்தும் ஒன்றுமே நடக்கவில்லை என்று திமுக மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியிருந்தார். இதற்கு கட்டடம் சென்னையில் இருந்தாலும் கட்டளைகள் டெல்லியில் இருந்து வருவதாக கனிமொழி மீண்டும் விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான ஏற்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கனிமொழி “தமிழகத்திற்குத் துரோகம் செய்து வரும் பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்துள்ளது. தற்போது அ.தி.மு.க அலுவலகத்தையே எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு மாற்றிவிட்டார். அமித்ஷாவின் வீடுதான் அ.தி.மு.கவின் அலுவலகமாக உள்ளது” என சரமாரியாக விமர்சித்தார்.
நேற்று கனிமொழி கூறிய விமர்சனங்களுக்கு இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தக்க பதிலடி கொடுத்தார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடைபெற உள்ள பிரச்சார நிகழ்ச்சியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, திமுகவை சேர்ந்த கனி மொழி அவர்கள் அதிமுக அலுவலகம் டெல்லியில் உள்ளதாக பேசியுள்ளார். ஆனால் சென்னையில் தான் உள்ளது. வந்து பார்த்து செல்லுங்கள் என்றார். அதிமுகவை உடைக்க சதி செய்தனர். ஆனால் அத்தனையும் முறியடிக்கப்பட்டது எனக்கூறியிருந்தார்.
இதையும் படிங்க: “NO WAY”... இபிஎஸ்ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது… TTV திட்டவட்டம்…!
அதற்கு இன்று பதிலடி கொடுத்துள்ள திமுக எம்.பி.கனிமொழி, அதிமுக அலுவலக கட்டிடம் சென்னையில் இருந்தாலும், டெல்லியில் இருந்துதான் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது. தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கக்கூடிய ஒருவரோடு தான் எடப்பாடி பழனிசாமி நாலு வருஷம் தூங்கி எழுந்து, இப்பொழுது கை கோர்த்து கொண்டிருக்கிறார். டெல்லில் அமித் ஷா வீட்டு வாசலில் காரில் இருந்து வெளியில வராரு, வெளியே வரும் போது பத்திரிக்கையாளர்கள் அங்கே சூழ்ந்து கொள்ளும் பொழுது முகத்தை ஒரு கர்சீப் எடுத்து மறைச்சிக்கிறாரு. கேட்டால், முகத்தை கர்சீப் வைத்து துடைத்துக் கொண்டதாக சொல்கிறார். திடீரென உள்ளே இருந்தவரை பார்த்து வியர்த்ததா? அல்லது வெளியே இருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்து வியர்த்ததா? என தெரியவில்லை.
இப்போது அதிமுக அலுவலகம் எங்கே என கேட்டீர்கள் என்றால், அது அமித் ஷாவுடைய வீடு தான். அதிமுகவில் யாரோட யாருக்கும் சண்டை இருந்தாலும், எந்த பஞ்சாயத்து இருந்தாலும் அங்க போய் தான் தீர்த்துக்கொள்கிறார்கள் என சரமாரியாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க: “என் தொகுதி நிதியில் கட்டுனதை நீ எப்படி திறப்ப?” - ரேஷன் கடை திறப்பு விழாவில் திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம்...!