செஞ்ச சத்தியத்தை மீறிவிட்டார் முதல்வர் விஜய்! இப்படி பண்ணக்கூடாது! திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு!
முதல்வர் விஜய் தனது ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறிவிட்டார் என திமுக எம்.பி வில்சன் குற்றம் சாட்டினார். அமைச்சரவைக் கூட்டங்கள், ஆய்வுக் கூட்டங்களில் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி பங்கேற்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்களில் அதிகாரப்பூர்வ பதவி இல்லாத இருவர் தொடர்ந்து பங்கேற்று வருவதாகக் கூறி, தி.மு.க. தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகரும் மாநிலங்களவை உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் நண்பர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தமிழக அரசில் எந்த அதிகாரப்பூர்வ பொறுப்பில் உள்ளனர் என்பது இதுவரை பொதுமக்களுக்கு தெளிவாக அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் அலுவலகத்திற்கு அருகிலேயே இந்த இருவருக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவைக் கூட்டங்கள், ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் முக்கிய நிர்வாக ஆலோசனைகளில் அவர்கள் பங்கேற்பதாகவும் பி. வில்சன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் முடிவுக்கு போன ஆட்சியிலேயே செக் வைத்த திமுக! தலைமை செயலருக்கு பணி நீட்டிப்பில் சிக்கல்!
அரசு ஊழியர்களாக இல்லாதவர்கள் என்றால், ரகசிய ஆவணங்கள் மற்றும் முக்கிய நிர்வாக விவாதங்கள் நடைபெறும் கூட்டங்களில் அவர்கள் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் பங்கேற்கிறார்கள் என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் பதவியேற்கும்போது ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்திருப்பதை சுட்டிக்காட்டிய பி. வில்சன், இத்தகைய நபர்கள் அரசு முடிவுகள் தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவது அரசியலமைப்பு நடைமுறைகள், அலுவல் விதிமுறைகள் மற்றும் நிர்வாக ஒழுங்குமுறைகள் தொடர்பாக முக்கிய சந்தேகங்களை எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.
எனவே, ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோரின் அதிகாரப்பூர்வ பதவிகள் என்ன, எந்த உத்தரவின் அடிப்படையில் அவர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கிறார்கள், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பொதுமக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு அல்லது முதல்-அமைச்சர் அலுவலகம் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் சொன்ன ஒற்றை வார்த்தை!! பதறிப்போன பிரேமலதா! அறிவாலய கதவை தேடிச் சென்று தட்டியதன் காரணம்?!