தவெகவை பார்த்து அஞ்சும் திமுக? நடவடிக்கை எடுக்க பயம்? நிர்வாகிகள் கட்சி மாறிவிடுவார்களோ என அச்சம்?!
தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்த குழுவின் பரிந்துரையை தி.மு.க., தள்ளிப்போடுகிறதா என கட்சிக்குள் அதிருப்தி உருவாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கட்சியின் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்ய தி.மு.க. அமைத்த கள ஆய்வுக்குழுவின் பரிந்துரைகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், புதிய மறுசீரமைப்புக் குழுவை கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது கட்சிக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. தனித்து 59 தொகுதிகளிலும், கூட்டணியுடன் சேர்த்து மொத்தம் 73 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், ஆட்சியை இழந்தது கட்சிக்கு எதிர்பாராத பின்னடைவாக அமைந்தது. இதையடுத்து தோல்விக்கான காரணங்களை ஆராய 38 பேர் கொண்ட சிறப்பு கள ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு மாநிலம் முழுவதும் தொகுதிவாரியாக ஆய்வு நடத்தி, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துகளை சேகரித்து விரிவான அறிக்கையை கட்சி தலைமையிடம் வழங்கியதாக தகவல்கள் வெளியாகின.
அந்த அறிக்கையில், 34 மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கட்சியின் நிர்வாக அமைப்பை மாற்றி, இரண்டு சட்டசபைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் என்ற புதிய நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்சியில் விரைவில் முக்கிய மாற்றங்கள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிர்வாகிகள் மத்தியில் உருவாகியிருந்தது.
இதையும் படிங்க: யாரையும் காப்பாத்த வேணாம்! தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்க! மு.க.ஸ்டாலின் கறார்!
இந்நிலையில், "உடன்பிறப்பின் குரல்" என்ற ஆன்லைன் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் புதிய மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையடுத்து, தேர்தல் தோல்வி தொடர்பான கள ஆய்வுக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.
சில கட்சி நிர்வாகிகள் கூறுவதாவது, தேர்தல் தோல்வி குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி தலைமை முன்பு உறுதியளித்திருந்தது. ஆனால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் சில நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு செல்லக்கூடும் என்ற அச்சம் தலைமையிடம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், கட்சி நிர்வாக மாற்றங்கள் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்த எதிர்பார்ப்பும் தொடர்ந்து நிலவி வருகிறது. இருப்பினும், கள ஆய்வறிக்கை மற்றும் புதிய மறுசீரமைப்புக் குழு தொடர்பாக வெளியாகும் தகவல்கள் குறித்து தி.மு.க. தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க: தவெக நவீன வாஷிங் மெஷின்..! அடிமை TO ஆச்சரியக்குறி..!! திமுக கலாய்..!!