ராணிப்பேட்டையில் மீண்டும் களமிறங்கும் காந்தி!! அப்பாவுக்காக விட்டுக்கொடுத்த மகன்!! திமுக தலைமைக்கு ஷாக்!!
ராணிப்பேட்டையில் தன் தந்தையும், அமைச்சருமான காந்தி போட்டியிடுவார் என, திமுக தலைமையால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினோத் காந்தி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை தொகுதியில் தந்தைக்காக சீட் விட்டுக்கொடுத்தார் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி!
தி.மு.க.வில் மற்றொரு திடீர் திருப்பம்! ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் ஆர்.காந்தியின் மகன் வினோத் காந்தி, தனது சீட்டை தந்தைக்கு விட்டுக்கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த சட்டசபைத் தேர்தலில் கைத்தறி அமைச்சர் ஆர்.காந்திக்கு சீட் மறுக்கப்பட்டு, அவரது மகன் வினோத் காந்திக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இது அமைச்சர் காந்தியிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. வினோத் காந்தியும் பிரசாரத்தை தொடங்காமல் இருந்து வந்தார்.
இதையும் படிங்க: திடீர் திடீரென மாறும் வேட்பாளர்கள்!! திக் திக் நிர்வாகிகள்! எந்த தேர்தல்லையும் இப்படி நடக்கல!!
இந்த நிலையில், இன்று வினோத் காந்தி திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், “2026 சட்டசபைத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்து என்னை நம்பி தேர்ந்தெடுத்த தலைவருக்கும், சகோதரர் உதயநிதிக்கும் எனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “என்னை உறுதியாக ஆதரித்து நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தைக்காக மகன் விட்டுக்கொடுத்தாலும், ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் மாற்றம் தொடர்பாக தி.மு.க. தலைமையிடம் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் காந்தி மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்ததால், மகன் வினோத் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தி.மு.க.வில் குடும்ப அரசியல் விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம், ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க.வின் தேர்தல் உத்தியை எப்படி பாதிக்கும் என்பது இப்போது பெரும் கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: தொகுதியும் கிடைக்கல! கொடுத்த தொகையும் கிடைக்கல!! விரக்தியில் புலம்பும் கமல் கட்சி நிர்வாகிகள்!