×
 

காட்பாடி வேட்பாளர்னு என்னை சொல்லாதீர்கள்!! துரைமுருகன் கோவம்!! தலைமை அறிவிக்கட்டும் என சமாளிப்பு!

திமுக தலைமை இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அதற்குள் என்னை காட்பாடி வேட்பாளர் என சொல்லாதீர்கள் என அமைச்சர் துரைமுருகன் திமுகவினரை கடிந்து கொண்டார்.

வேலூர்: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், திமுகவுக்குள் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் தன்னை வேட்பாளராக அறிவிக்காத வரை, தன்னை “காட்பாடி வேட்பாளர்” என்று யாரும் அழைக்கக் கூடாது என அமைச்சர் துரைமுருகன் திமுகவினரை நேரடியாக எச்சரித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுகவின் கேவிகுப்பம் மற்றும் காட்பாடி தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கதிர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர் துரைமுருகன் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “நீங்கள் என்னை காட்பாடி தொகுதி வேட்பாளர் என்று அழைத்துப் பேசுகிறீர்கள். ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். திமுக தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ, அந்த நேரத்தில் தான் வேட்பாளர் வருவார். உங்கள் மகிழ்ச்சிக்காக இப்போதே என்னை வேட்பாளர் என அழைப்பது சரியல்ல. நான் தலைமைக்கு கட்டுப்பட்டவன். இதை நான் ரசிக்கவில்லை” என்று கடுமையாகக் கூறினார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இருந்து திருமா., கம்யூ., வெளியேறுவார்கள்! அடித்துச் சொல்லும் அண்ணாமலை! மாற்றம் வருமா?

மேலும் அவர், “அகில இந்திய அளவில் பல கட்சிகள் நிதானம் இல்லாமல் இருக்கும் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாதூர்யத்துடன் பொறுமையாக கூட்டணியை முடித்தார். இது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இப்போது அரசியல் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறப் போவதில்லை. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று வாக்குறுதிகள் மட்டுமே. திமுக தேர்தல் அறிக்கை குழுவில் நான் இல்லை. எனவே தேர்தல் அறிக்கை பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்றார். 

திருமாவளவனுக்கு குறைந்த இடங்கள் கொடுத்தது ஏன் என்ற கேள்விக்கு, “திருமாவளவன் திருப்தியாகச் சென்றார்” என்று சுருக்கமாக பதிலளித்தார்.

திமுக தலைமை இன்னும் காட்பாடி தொகுதிக்கான வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், அமைச்சர் துரைமுருகனின் இந்த எச்சரிக்கை கட்சிக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. துரைமுருகன் தொடர்ந்து காட்பாடியில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அவரே வேட்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தலைமை முடிவு எடுக்கும் வரை தன்னை வேட்பாளர் என அழைக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியிருப்பது, திமுகவினரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல் களம் இப்போது தேர்தல் அறிவிப்புகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும் சூழலில், அமைச்சர் துரைமுருகனின் இந்த கடுமையான பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தொகுதி பங்கீட்டை முடிக்க அவசரம் காட்டும் திமுக! காக்க வைக்கப்படும் திருமாவளவன்! கூட்டணிக்குள் சர்ச்சை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share