பெற்ற மகனே நெஞ்சில் குத்துகிறார்! தூக்க மாத்திரையிலும் உறக்கம் வரவில்லை! கண்கலங்கிய ராமதாஸ்!
“நான் ஊட்டி வளர்த்த பிள்ளையே இன்று என்னை முதுகிலும் நெஞ்சிலும் ஈட்டியால் குத்துகிறான்” எனப் பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்ணீர் கலங்கினார்.
“நான் ஊட்டி வளர்த்த பிள்ளையே இன்று என்னை முதுகிலும் நெஞ்சிலும் ஈட்டியால் குத்துகிறான்” எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விம்மி விம்மி அழுதது, அங்கிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
தனது மகன் அன்புமணி தனக்கு இழைத்து வரும் அவமானங்களையும், துரோகங்களையும் பட்டியலிட்ட ராமதாஸ், “பெற்ற தகப்பனைத் தலையணை வைத்துத் கொல்லச் சொல்லும் ஒரு மகனை நான் வளர்த்திருக்கிறேன்” எனத் தனது தாயின் நினைவுகளைப் பகிர்ந்து கண்ணீர் சிந்தினார். மேலும், சௌமியா அன்புமணி பாமக கொடியைப் பயன்படுத்தக் கூடாது என தடை விதித்தார்.
சேலத்தில் இன்று நடைபெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய மருத்துவர் ராமதாஸ், இதுவரை கண்டிராத ஒரு உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தினார். “ஆண்டு இறுதி மற்றும் புத்தாண்டு வரவேற்புக்காக இந்தக் கூட்டம் கூடினாலும், என் மனமோ பாரத்தினால் துடித்துக் கொண்டிருக்கிறது. நான் யாருக்காக வாழ்ந்தேனோ, யாருக்குப் பதவிகளைக் கொடுத்தேனோ, அந்தப் பிள்ளைகளே இன்று என்னை எதிரணியில் இருந்து தூற்றுகிறார்கள். என்னையும், கௌரவத் தலைவர் ஜி.கே.மணியையும் அவர்கள் மிக மோசமாகப் பேசி வருகிறார்கள்” எனத் தனது வேதனையைத் தொடங்கினார்.
இதையும் படிங்க: "ரத்தமும் சதையுமாய் வளர்த்த கட்சிக்கு துரோகமா?" அன்புமணிக்கு எதிராக கொதித்தெழுந்த ஜி.கே.மணி!
தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு நாளும் எனக்குத் தூக்கம் வருவதில்லை. என் கனவில் வந்த என் தாய், ‘ஏனப்பா அழுகிறாய்?’ எனக் கேட்டாள். அதற்கு நான், ‘அம்மா, பெற்று வளர்த்த தகப்பனையே தலையணை வைத்துத் தள்ளிக் கொல்லச் சொல்லும் ஒரு மகனை நான் வளர்த்திருக்கிறேன்’ எனச் சொன்னேன். சென்னையில் தகப்பனை வெட்டிச் சாக்குப் பையில் போட்ட செய்திகளைப் படித்திருக்கிறோம்; ஆனால் என்னை அப்படிச் செய்யாமல், ஒவ்வொரு நாளும் அவமானங்களால் அன்புமணி சித்ரவதை செய்கிறார்” எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மக்கள் அனைவரும் ‘ஏன் அன்புமணி இப்படிச் செய்கிறார், இன்னும் சில காலம் பொறுக்கக் கூடாதா?’ எனக் கேட்பதாகவும், ஆனால் அவரை மாற்றத் தன்னிடம் வழியில்லை என்றும் அவர் நொந்து கொண்டார்.
அன்புமணிக்குத் தொண்டர்கள் மத்தியில் 5 சதவீத ஆதரவு கூட இல்லை எனக் குறிப்பிட்ட ராமதாஸ், சௌமியா அன்புமணி பாமக கொடியைப் பயன்படுத்தக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். “நான் சத்தியம் செய்த காரணத்தினால்தான் அன்புமணி அமைச்சரானார். ஆனால் இன்று அவரது செய்கைகளால் நான் தூக்க மாத்திரை சாப்பிட்டாலும் உறக்கம் வருவதில்லை. பாட்டாளி மக்களை நினைக்கும் போதுதான் எனக்கு உறக்கம் வருகிறது” எனக் கூறிய அவர், 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிச்சயம் பெற்றுத் தருவேன் என உறுதி அளித்தார். இறுதியில், “நான் அறிவிக்கப் போகும் கூட்டணி நிச்சயம் வெற்றி கூட்டணியாக இருக்கும்; மக்கள் என்னை என்றும் கைவிட மாட்டார்கள்” என உரையை முடித்தபோது, அவர் மார்பில் கை வைத்து அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்க வைத்தது. ஜி.கே.மணி மற்றும் காந்திமதி ஆகியோர் அவரை ஆசுவாசப்படுத்தினர்.
இதையும் படிங்க: "பாமக யாருக்கு சொந்தம்?" சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு தொடக்கம்! 'ஐயா தான் ஆணிவேர்' முழக்கத்தால் அதிரும் அரங்கம்!