×
 

ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்முறை!! டெல்லி தலையீட்டால் இபிஎஸ் - டிடிவி கைகோர்ப்பு! பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்?!

அ.ம.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பழனிசாமியும், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தினகரனும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியும், அ.ம.மு.க. பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனும் இதுவரை தவிர்த்து வந்த பரஸ்பர ஆதரவு பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். 

நேற்று சென்னை சைதாப்பேட்டையில் அ.ம.மு.க. வேட்பாளர் செந்தமிழனுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்தார். அதே நேரத்தில், தினகரனும் மதுரவாயலில் அ.தி.மு.க. வேட்பாளர் பெஞ்சமினுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த இரு நிகழ்வுகளும் தேர்தல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

தே.ஜ. கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெற்றிருந்தாலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பழனிசாமி - தினகரன் இடையே கடுமையான மோதல் நீடித்து வந்தது. இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக ஆதரவு அளித்து பிரசாரம் செய்வதை தொடக்கத்தில் தவிர்த்தனர். இந்த நிலை செய்தி ஊடகங்களிலும் பேசுபொருளானது.

இதையும் படிங்க: அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்! பியூஸ்கோயல் தமிழகம் வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடுகள் இறுதி?!

இதையடுத்து, பழனிசாமி தனது பிரசாரப் பயணத் திட்டத்தை மாற்றி சைதாப்பேட்டைக்கு வந்தார். தினகரனும் தனது திட்டத்தை மாற்றி மதுரவாயல் பகுதிக்குச் சென்றார். இந்த மாற்றம், பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் தலையீட்டால் ஏற்பட்டதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறுகையில், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரு தலைவர்களிடையேயும் கடுமையான பகை இருந்தது. இந்தப் பகையை சரிசெய்து இருவரையும் ஒரே கூட்டணிக்குள் கொண்டு வர பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பல மாதங்கள் கடுமையாக முயற்சி செய்தனர். 

கூட்டணி அமைந்தாலும், உள்ளுக்குள் பகை தொடர்ந்தது. இருவரும் பரஸ்பரம் ஆதரவு பிரசாரம் செய்ய மறுத்தனர். இந்த விஷயம் டெல்லி தலைவர்களின் கவனத்துக்குச் சென்றது. அவர்களின் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் இரு தலைவர்களும் மனம் மாறி, இப்போது ஒருவருக்கொருவர் ஆதரவாக பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்” என்றனர்.

இந்த புதிய மாற்றம், தே.ஜ. கூட்டணியின் உள்ளார்ந்த ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இரு தரப்பு தொண்டர்களிடையேயும் இன்னும் சில சந்தேகங்கள் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், பழனிசாமி - தினகரன் இடையேயான இந்த பரஸ்பர ஆதரவு பிரசாரம் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்? திமுகவில் இணைந்ததும் பற்ற வைக்கும் பன்னீர் செல்வம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share