அறியாமையில் பேசுகிறார் விஜய்.. உடனடியாக ரியாக்ட் செய்த எடப்பாடி பழனிசாமி..!!
மதுரை மாநாட்டில் அதிமுக குறித்த விஜயின் விமர்சனத்திற்கு, அவர் அறியாமையில் பேசுவதாக எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மிகப்பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. மாநிலம் முழுவதிலிருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், விஜய் தனது 33 நிமிட உரையில்,, கொள்கை எதிரி பாஜக. அரசியல் எதிரி திமுக என மீண்டும் திட்டவட்டமாக உறுதியாக தெரிவித்தார். தவெகவுக்கும் திமுகவுக்கும் எதிராகத்தான் போட்டி எனத் தெரிவித்தார்.
மேலும், விஜய் தனது உரையில், அதிமுக-பாஜக கூட்டணியை கடுமையாக எதிர்த்து, “பாஜக தமிழ்நாட்டில் ஒருபோதும் நுழைய முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறினார். இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, தவெகவின் தனித்து போட்டியிடும் உறுதியை வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: மாநாட்டில் அரங்கம் அதிர பேசிய விஜய்.. நடுவில் சொன்ன குட்டி ஸ்டோரி இதுதான்..!!
விஜய்யின் இந்த உரையில், திமுக முதலமைச்சர் ஸ்டாலினை “அங்கிள்” என்று அழைத்து விமர்சித்ததும் கவனம் பெற்றது. மாநாட்டில், “நாம் மாற்று சக்தி அல்ல, முதன்மை சக்தி” என்று விஜய் அறிவித்து, தவெகவின் அரசியல் இலக்கை உறுதிப்படுத்தினார். 200 அடி நீள மேடையில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் நடந்த இந்த மாநாடு, தவெகவின் தென் மாவட்ட பலத்தை நிரூபித்தது. விஜய்யின் இந்த விமர்சனங்கள், தமிழக அரசியலில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநில மாநாட்டில் திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்தார் விஜய். ஆனால் அதிமுக-வை விமர்சிக்கவில்லை. இதனால் அதிமுக உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்தச் சூழலில் இன்று மதுரையில் நடைபெற்ற 2ஆவது மாநில மாநாட்டில் அதிமுக கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசினார் விஜய்.
எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியான அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து கடுமையாகப் பேசினார். “எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது, முதலமைச்சர் பதவியை யாராலும் கற்பனை செய்ய முடியவில்லை. ஆனால், இன்று அந்தக் கட்சி எப்படி உள்ளது?” என்று மறைமுகமாக அதிமுகவை சாடினார். இது அதிமுக தொண்டர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விஜய்யின் இந்தப் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதிலளித்தார். காஞ்சிபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “அதிமுக யார் கையில் இருக்கிறது என்று சிலர் இன்று கேட்கிறார்கள். பாவம் அவர்கள் அறியாமையின் காரணமாக பேசுகிறார்கள் என நான் பார்க்கிறேன். இதுகூட தெரியாமல் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறீர்கள் என்று சொன்னால், அவரை நம்பி தொண்டர்கள் எப்படி இருப்பார்கள்” என பதில் கொடுத்துள்ளார்.
"புதிதாக கட்சி தொடங்கியவர்கள் அதிமுக தலைவர்களின் படங்களைப் பயன்படுத்தி பேசுகிறார்கள். ஆனால், மக்கள் அதிமுகவைத்தான் பிரதான எதிர்க்கட்சியாக அங்கீகரித்துள்ளனர்," என்று அவர் கூறினார். எடப்பாடி மேலும் கூறுகையில், "சினிமா மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அரசியலுக்கு வருபவர்கள், அறியாமையில் பேசுவது வழக்கம்தான். தவெக-திமுக இடையேதான் போட்டி என்று விஜய் பேசியது, தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக மட்டுமே," என தெரிவித்தார்.
இந்த பேச்சு, கூட்டத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினரிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் அரசியல் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, எடப்பாடி, ஜனநாயகத்தில் அனைவருக்கும் அரசியல் பேச உரிமை உள்ளதாகவும், ஆனால் அதிமுகவின் வலிமையை மக்கள் அறிவார்கள் என்றும் கூறினார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரமாண்ட கூட்டணி அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதற்கு முன்னதாக, ராணிப்பேட்டை சுற்றுப்பயணத்தின்போதும் விஜய்யை மறைமுகமாக விமர்சித்திருந்தார் எடப்பாடி. இந்த விமர்சனத்திற்கு தவெக தரப்பிலிருந்து உடனடி பதில் வரவில்லை. தமிழக அரசியலில் தவெக-அதிமுக இடையே மோதல் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தம்பியே வா! தலைமை ஏற்க வா... வாங்க விஜய் பாத்துக்கலாம்! ஆதவ் அர்ஜுனா ஃபயர் ஸ்பீச்